/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர் பொன்முடியை எதிர்த்து போட்டியிட தயார் பா.ஜ.,வில் 'சீட்' பெற மாஜி எம்.எல்.ஏ.,க்கள் மல்லுக்கட்டு
/
அமைச்சர் பொன்முடியை எதிர்த்து போட்டியிட தயார் பா.ஜ.,வில் 'சீட்' பெற மாஜி எம்.எல்.ஏ.,க்கள் மல்லுக்கட்டு
அமைச்சர் பொன்முடியை எதிர்த்து போட்டியிட தயார் பா.ஜ.,வில் 'சீட்' பெற மாஜி எம்.எல்.ஏ.,க்கள் மல்லுக்கட்டு
அமைச்சர் பொன்முடியை எதிர்த்து போட்டியிட தயார் பா.ஜ.,வில் 'சீட்' பெற மாஜி எம்.எல்.ஏ.,க்கள் மல்லுக்கட்டு
ADDED : மார் 19, 2025 04:57 AM

சட்டசபை தேர்தலில் திருக்கோவிலுார் தொகுதி யில் அமைச்சர் பொன்முடியை எதிர்த்து, பா.ஜ., சார்பில் போட்டியிட, முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள் இருவர் மல்லுக்கட்டி நிற்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், முகையூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சம்பத். இவர், கடந்த 1989 மற்றும் 1996ம் ஆண்டுகளில் முகையூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவரது தந்தையான முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி, தாய் பத்மாவதி அம்மாள் ஆகியோர், இதே தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளனர். தி.மு.க., மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்து வந்த சம்பத்துக்கு, 2006ம் ஆண்டு தேர்தலில் 'சீட்' கொடுக்கவில்லை.
முகையூர் தொகுதியை, தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு ஒதுக்கியது. அதிருப்தியடைந்த சம்பத், சுயேச்சையாக போட்டி யிட்டு, தோல்வியடைந்தார். பின், தே.மு.தி.க., வில் சேர்ந்தார்.
இதையடுத்து, தே.மு.தி.க.,விலிருந்து விலகி, மீண்டும் தி.மு.க.,வில் சேர்ந்தார். ஆனாலும், அங்கு சம்பத் ஒரங்கட்டப்பட்டார். இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு, தி.மு.க.,விலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். அவருக்கு, பா.ஜ., மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார் அருகே உள்ள தேவனுார் கூட்டுரோடு பகுதியை சேர்ந்தவர் கலிவரதன். இவர் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முகையூர் தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2011ம் ஆண்டு வரை எம்.எல்.,ஏ.,வாக பதவி வகித்தார்.
பின்னர், அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தார். அதன்பிறகு, அங்கிருந்தும் விலகி, பா.ஜ.,வில் இணைந்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார்.
இவர், ஏற்கனவே வெற்றிபெற்ற முகையூர் தொகுதி, மறுசீரமைப்பில் திருக்கோவிலுார் தொகுதியாக மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் திருக்கோவிலுார் தொகுதி பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு, அமைச்சர் பொன்முடியிடம் 91 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில், இவர் வகித்து வந்த மாவட்ட தலைவர் பதவிக்கு, தர்மராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர், அரசியலில் தொடர்ந்து பரபரப்பாக செயல்பட்டு வருபவர்.
இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் திருக்கோவிலுார் தொகுதியில் பா.ஜ. சார்பில் போட்டியிட, சம்பத் - கலிவரதன் ஆகிய இருவரும் முயற்சித்து வருகின்றனர்.
ஏற்கனவே, முகையூர் தொகுதியில் எதிர் எதிராக போட்டியிட்ட இருவரும், தற்போது திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிட, கட்சி மேலிடத்தில் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடியை எதிர்த்து களமிறங்க இருவரும் கட்சியில் 'சீட்' கேட்டு ஒற்றை காலில் நிற்கின்றனர்.
- நமது நிருபர்-