/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியின் சுகாதார கட்டமைப்பிற்கு விதை போட்ட பிரெஞ்சு அரசு
/
புதுச்சேரியின் சுகாதார கட்டமைப்பிற்கு விதை போட்ட பிரெஞ்சு அரசு
புதுச்சேரியின் சுகாதார கட்டமைப்பிற்கு விதை போட்ட பிரெஞ்சு அரசு
புதுச்சேரியின் சுகாதார கட்டமைப்பிற்கு விதை போட்ட பிரெஞ்சு அரசு
ADDED : செப் 07, 2025 03:10 AM
சின்னஞ்சிறிய மாநிலமாக இருந்தாலும் புதுச்சேரி மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு மிகவும் வலுவானது. அப்படியே பொடி நடையாய் நடந்து போய் சிகிச்சை பெறுகின்ற தொலைவிலேயே ஆரம்ப சுகாதார நிலையங்களும், கிளைகளும் உள்ளன.
இதனால் தான் எந்த ஒரு புதிய தடுப்பூசி திட்டமாக இருந்தாலும், அது புதுச்சேரியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் விதை போட்டது யார் தெரியுமா.. பிரெஞ்சியர்கள் தான்... 1701 இல் பிரான்சுவா மர்த்தேன் காலத்திலேயே புதுச்சேரியில் ஆங்கில முறை மருத்துவமனைகள் துவங்கப்பட்டுவிட்டது,. 18 ம் நுாற்றாண்டிற்குள்ளாகவே ஏழு மருத்துவமனைகள், மருந்தகங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள்....
ஆனால் பிரச்னையே மக்களின் தயக்கம். முதல் முதலாக 1849ல் காலராவுக்கு தடுப்பூசி அறிமுகமானது. ஆனால் ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கை இல்லாத பாமர மக்கள் அதற்கு உடன்படவில்லை. எனவே ஊசி போட்டுக்கொண்டால் ஒரு பணம் இலவசமாக தரப்படும் என்று அரசு ஆசை காட்டி தான் போட வைத்ததது.
இதனால் தடுப்பூசி இயக்கம் கொஞ்சம் சூடு பிடித்த போதிலும் அதுவும் கொஞ்சம் நாளைக்கு தான்.. வேறு வழியின்றி 1863 பிப்ரவரி 21ம் தேதி அரசாணை வெளியிட்டு தடுப்பூசியை கட்டாயமாக்கியது.
இது ஒரு பக்கம் இருக்க, 1879ல் அம்மை நோய்க்கு முதல் முதலாமாக தடுப்பூசியை பிரெஞ்சு அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் மக்கள் அதை ஏற்கவில்லை. இது அம்மனுக்கு செய்யும் அவமரியாதை என்றும், தங்களின் மத உணர்வுகளுடன் விளையாட வேண்டாமென்று கடுமையாக எச்சரித்தனர். தடுப்பூசி போட்டு கொள்ள பிடிவாதமாக மறுத்தனர். ஆனால் பிரெஞ்சு அரசும் விடுவதாக இல்லை. சுகாதார ஊழியர்களை வீதி வீதியாக களம் இறக்கியது.
அவர்களிடம் பிடிபடாமல் இருக்க வீட்டு பரண்கள், தொம்பை குதிருக்குள் ஓடி ஒளிந்தனர். சுகாதார ஊழியர்கள் ஊருக்குள் வந்ததும், அப்படியே வயல், காடுகளில் சிட்டாக பறந்து சென்று ஒளிந்து கொண்டனர். ஜாதிகளால் பிரிந்த சமூகத்தில் வேறு பிரச்னையும் எதிரொலித்தது. ஒரே ஊசிபோட்டு அனைவரையும் ஒன்றாக பார்ப்பதாக உயர்ஜாதியினர் குற்றம் சாட்டினர். கிராமிய சிகிச்சை முறைகள் பலனளிக்காத நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமடைந்தது.
சாகும் நிலையில் கூட மருத்துவமனை வர மறுத்தனர். வீட்டின் மூலையில், கோவில் வளாகத்தில் கிடத்திவிட்டு சாவதற்கு காத்திருந்தனர். சிலர் நாள்பட்ட சீழ் பிடித்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அவர்களில் நிலைமை மிகவும் மோசமாக காணப்பட்டது. மக்களின் அறியாமை கண்டு கவலை கொண்ட பிரெஞ்சு அரசு 1884 ஏப்ரல் 3ம் தேதி , கொம்யூன்களிலும் தடுப்பூசிஇயக்கம் நடத்த வேண்டும் என மேயர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும் மக்கள் நம்பிக்கையில் மேயர்கள் தலையிட விரும்பவில்லை. அம்மையால் அதிகம் பாதிக்கப்பட்ட காலாப்பட்டு, ஒழுகரை பகுதிகளில் கொத்து கொத்தாக மனிதர்கள் செத்து விழ, பிரெஞ்சு அரசு கொந்தளிந்தது. பிரெஞ்சு மூவண்ணக் கொடியின் கீழ் ஆளும் அரசு அம்மன் பெயரால் வரும் எதிர்ப்பை பொறுத்து கொள்ளாது என்று ஆளுநர் கப்ரியேல் லுாயி அங்குல்வான் எச்சரித்தார்.
எனவே 1906ல் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அப்படி இருந்தும் கூட தடுப்பூசி மீதான மக்களின் தயக்கம் போகவில்லை.
1930ல் மக்கள் அனைவருக்கும் முழுமையான பாதுகாப்பு என்ற பெயரில் வெகுமக்கள் இயக்கம் ஒன்றை அரசு நடத்தியது.
பெருந்தொற்றை தடுக்க முழுவதுமாக பிரெஞ்சு அரசினால் முடியாவிட்டாலும், அவர்கள், மக்களின் தயக்கத்தை போக்க வகுத்த வழிமுறைகள் தான் புதுச்சேரி விடுதலை பெற்ற பிறகு சுகாதார கட்டமைப்புகளில் வலுவாக கால்தடம் பதிக்க காரணமாகவும் அமைந்தது.