/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருத்திய பட்ஜெட் தயாரிப்பில் அரசு துறைகள் தீவிரம்: புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பு
/
திருத்திய பட்ஜெட் தயாரிப்பில் அரசு துறைகள் தீவிரம்: புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பு
திருத்திய பட்ஜெட் தயாரிப்பில் அரசு துறைகள் தீவிரம்: புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பு
திருத்திய பட்ஜெட் தயாரிப்பில் அரசு துறைகள் தீவிரம்: புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பு
ADDED : டிச 17, 2024 05:09 AM

புதுச்சேரி: திருத்தப்பட்ட பட்ஜெட்டினை சமர்பிப்பதற்காக அனைத்து அரசு துறைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். லோக்சபா தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்திற்கு 4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் முடிந்ததும் நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் முதல்வர் ரங்கசாமி ஆகஸ்ட் 2ம் தேதி 12,700 கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். மேலும் கடந்த 1.4.2024 முதல் 31.8.2024 வரை 5 மாதங்களுக்கு அரசின் அன்றாட செலவினங்களுக்காக முன்னளி மானியமாக ரூ.5 ஆயிரத்து 187 கோடிக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து பட்ஜெட்டில் ரூ.10,969.80 கோடி வருவாய் செலவினங்களுக்காககவும், ரூ.1,730.20 கோடி மூலதன செலவினங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
திருத்திய பட்ஜெட்
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த ஆண்டின் இறுதிக்குள் வரவு - செலவுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாய் வராமல் போயிருக்கலாம். அதற்குத் தக்கவாறு செலவுகளைக் குறைக்க வேண்டி இருந்திருக்கலாம். அல்லது சில புதிய செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம்.
இதனை எல்லாம் அடுத்து வருகின்ற, சட்டசபை கூட்டங்களில் திருத்திய பட்ஜெட் மதிப்பீடுகளாக ஒப்புதல் பெறுவதற்காகத் தாக்கல் செய்யப்படும். எனவே திருத்திய பட்ஜெட்டினை தயாரிக்க அனைத்து துறைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
செலவினம்
அரசின் நிதி ஆதாரத்தின் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.2,574 கோடி சம்பளத்துக்கும், ரூ.1,388 கோடி ஓய்வூதியத்திற்கும், ரூ.1,817 கோடி கடன், வட்டி செலுத்தவும், ரூ.2,509 கோடி மின்சாரம் வாங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசின் மற்ற முக்கிய நலத்திட்டங்களான முதியோர் ஓய்வூதியம், குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி, கியாஸ் சிலிண்டர் மானியம் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரூ.1,900 கோடியும், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.420 கோடியும், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானிய கொடையாக 1082 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செலவினம் அனைத்தும் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
கூடுதல் நிதி
மத்திய அரசு கடந்த நிதியாண்டில்(2023--24) திருத்திய மதிப்பீட்டில் கூடுதலாக ரூ.271 கோடியை புதுச்சேரிக்கு வழங்கியது. குறிப்பாக 2016ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான நிலுவைத்தொகை, அரசு கல்வி நிறுவனங்கள், சார்பு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான நிலுவைத் தொகைக்காக வழங்கியது.
இதன்மூலம் 16 ஆயிரம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும், 1,500 ஆசிரியர், ஊழியர்கள் பயனடைந்தனர். இந்தாண்டு இதேபோல் திருத்திய மதிப்பீட்டில் கூடுதல் தொகை வழங்க வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசிடம், புதுச்சேரி அரசு வலியுறுத்தியுள்ளது. எனவே இந்தாண்டும் மத்திய அரசின் கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.

