/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமூகநீதி தருவதாக நமது கலாசாரத்தை அழிக்க ஒரு சக்தி முற்படுகிறது; சிதம்பரத்தில் கவர்னர் ரவி பேச்சு
/
சமூகநீதி தருவதாக நமது கலாசாரத்தை அழிக்க ஒரு சக்தி முற்படுகிறது; சிதம்பரத்தில் கவர்னர் ரவி பேச்சு
சமூகநீதி தருவதாக நமது கலாசாரத்தை அழிக்க ஒரு சக்தி முற்படுகிறது; சிதம்பரத்தில் கவர்னர் ரவி பேச்சு
சமூகநீதி தருவதாக நமது கலாசாரத்தை அழிக்க ஒரு சக்தி முற்படுகிறது; சிதம்பரத்தில் கவர்னர் ரவி பேச்சு
ADDED : ஜன 28, 2025 05:47 AM

சிதம்பரம், : ''சமூகநீதி தருகிறோம் என ஒரு சக்தி உருவெடுத்து, நமது கலாசாரம், நாகரிகம், தர்மத்தை அழிக்க முற்பட்டுள்ளது'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள தனியார் மண்டபத்தில், சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் சுவாமி சகஜானந்தர் 135வது ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.
இவ்விழாவை, தமிழக கவர்னர் ரவி துவக்கி வைத்து பேசியதாவது:
நமது கலாசாரம், நாகரிகம் மீது பல ஆயிரம் ஆண்டுகளாக தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்திய கலாசாரம், இந்து சமுதாயத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனை அழித்தால் மட்டுமே நாம் இந்தியாவில் நுழைய முடியும் என கார்ல் மார்க்ஸ், பிரிட்டிஷ் அரசிடம் தெரிவித்தார். மற்றொன்று, 'உங்கள் கடவுள் தீய சக்தி, எங்களது கடவுள் உயர்ந்தது' என கூறி மதம் மாற்றம் செய்ய கிறிஸ்தவ மிஷனரிகள் முனைந்தார்கள். தற்போது அந்த வரலாற்றை திருத்தி, பொய் சொல்லி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் தான் சுவாமி சகஜானந்தா, இரண்டு தீய சக்திகளை ஒதுக்கி வைத்து, கல்வி மூலம் தான் நம் சமுதாயத்தை வளர்க்க முடியும் என நினைத்தார். அதற்காக நந்தனார் கல்விக் கழகத்தை துவக்கி வைத்தார்.
இன்றும், பட்டியல் சமூக ஊராட்சி மன்ற தலைவர்கள், அவர்களுக்குரிய நாற்காலியில் அமரமுடியாத நிலை உள்ளது. சில இடங்களில் மக்கள் காலணி அணிந்து நடக்க முடியவில்லை. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இந்த நிலைதான் தொடர்கிறது.
நாகை கீழ்வெண்மணியில் 48 தலித் சமுதாயத்தினர் மாவோயிஸ்ட் தூண்டுதலின்பேரில் தீயிட்டு எரிக்கப்பட்டனர். 58 ஆண்டுகளுக்கு பிறகும் அப்பகுதி மக்கள் மிகுந்த கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு நினைவு சின்னம் அமைத்ததற்கு பதில், அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்து இருக்கலாம். அரசியல் காரணமாக அவர்கள் இன்று ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற காலக்கட்டத்தில்தான் சுவாமி சகஜானந்தா வருகை தந்து நந்தனார் பெயரில், தலித் மக்களுக்கு கல்வி நிறுவனங்களை சிதம்பரத்தில் தொடங்கியதால் மாற்றம் ஏற்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த 2 சக்திகளுடன், தற்போது, சுதந்திரத்திற்கு பிறகு 3வது சக்தியாக சமூகநீதி தருகிறோம் என ஒரு சக்தி உருவெடுத்து, நமது கலாசாரம், நாகரிகம், தர்மத்தை அழிக்க முற்பட்டுள்ளது.
எனவே, நாம் சுவாமி சகஜானந்தர் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும். தலித் சமுதாயத்தில் 200க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன. இந்த உட்பிரிவுகளுக்கு, தற்போது வந்துள்ள 3வது சக்தி சண்டையை ஏற்படுத்தி அரசியல் செய்து வருகிறது.
தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் தமிழ்நாட்டின் முதல்வராகவும், இஸ்ரோ விஞ்ஞானியாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும் வரவேண்டும் என்பது எனது ஆசை. தலித் சமுதாயத்தினர் தலை நிமர்ந்து நடக்க வேண்டும். நமது நாகரிகம், கலாசாரம், தர்மத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

