/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமர் அழைப்பு எதிரொலி டில்லி விரைந்தார் கவர்னர்
/
பிரதமர் அழைப்பு எதிரொலி டில்லி விரைந்தார் கவர்னர்
ADDED : ஏப் 13, 2025 05:36 AM

புதுச்சேரி, : பிரதமர் அழைப்பின் பேரில் கவர்னர் கைலாஷ்நாதன் டில்லி விரைந்துள்ளதால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மற்றும் நிதி கமிஷனில் சேர்க்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பிரதமரிடம், கவர்னர் நேரில் வலியுறுத்துவார் என, சில வாரங்களுக்கு முன் முதல்வர் ரங்கசாமி கூறினார்.
இந்நிலையில் கவர்னர் கைலாஷ்நாதன், அதிகாரிகளுடன் ஆலோசித்து புதுச்சேரிக்கான பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி வைத்துள்ளார். மேலும், துறை ரீதியாக உள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வு, மத்திய அரசிடம் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள கோப்புகள் விபரங்களை தயார்படுத்திய நிலையில், மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால், பாராளுமன்ற கூட்டத் தொடர், பல்வேறு மாநில தேர்தல் காரணமாக இந்த சந்திப்பு தாமதமாகி வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் நடந்த புதுச்சேரி சட்டசபையில், மாநில அந்தஸ்து கோரி மீண்டும் 16ம் முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசிடம் இருந்து கவர்னருக்கு அவசர அழைப்பு வந்தது. அதன்பேரில், அவர் நேற்று மாலை டில்லி புறப்பட்டு சென்றார்.
நேற்று முன்தினம் தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியான நிலையில் அன்று மாலையே புதுச்சேரி கவர்னரை டில்லிக்கு அழைத்துள்ளதால், அரசின் பிரதான கோரிக்கையும், மக்களின் வெகு நாளைய கோரிக்கையான மாநில அந்தஸ்து குறித்து இச்சந்திப்பில் பேசப்படலாம் எனத் தெரிகிறது.

