தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் புதிய சொத்துரிமை கார்டுக்கு கவர்னர் அனுமதி: முன்னோடி திட்டத்திற்கு அரசாணை

புதுச்சேரியில் புதிய சொத்துரிமை கார்டுக்கு கவர்னர் அனுமதி: முன்னோடி திட்டத்திற்கு அரசாணை

புதுச்சேரியில் புதிய சொத்துரிமை கார்டுக்கு கவர்னர் அனுமதி: முன்னோடி திட்டத்திற்கு அரசாணை


UPDATED : ஜூலை 26, 2026 06:32 PM

ADDED : ஜூலை 26, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 06:32 PM ADDED : ஜூலை 26, 2026 06:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகர்ப்புறங்களில் டிஜிட்டல் நில அளவை செய்யும் முன்னோடித் திட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கான சொத்துரிமை அட்டை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் நில வளங்கள் துறை நிதியுதவியுடன் நக் ஷா நவீன சர்வே திட்டம் புதுச்சேரியில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பரில் நாட்டின் முன்னோடி திட்டமாக துவங்கப்பட்டது. இதற்காக முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட முருகம்பாக்கம் வருவாய் கிராமத்தில் தற்போது நில அளவை மற்றும் பதிவுப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

டிரோன் சர்வே பணிகள்:: 4.87 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட முழு முருகம்பாக்கம் கிராமமும் டிரோன் தொழில்நுட்பம் மூலம் வான்வழியாக வெற்றிகரமாக நில அளவை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நில உட்பிரிவுகளைப் பதிவு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு, இதுவரை 2.56 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்குப் பணிகள் நிறைவடைந்துள்ளன. நில அளவை பணிகள் முடிந்த நில உரிமையாளர்களுக்கு நகர்ப்புற சொத்துரிமை அட்டை வழங்குவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் உள்ளூர் தேவைகளுக்கேற்ப அட்டையின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தனித்துவ எண்:: இந்த சொத்துரிமை அட்டையில் ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் யு.எல்.பி.என் என்ற தனித்துவ பிரத்யேக எண் வழங்கப்பட உள்ளது. இது நிலத்திற்கான ஆதார் எண் போல் செயல்பட்டு, நிலத்தின் அடையாளத்தை துல்லியமாக உறுதிப்படுத்தும். மேலும், புவியியல் தொலைவுகளுடன் கூடிய எப்.எம்.பி., ஸ்கெட்ச் இணைக்கப்படுவதால் எதிர்காலத்தில் எல்லைக் குழப்பங்களோ தகராறுகளோ எழ வாய்ப்பில்லை.

போலி ஆவணம் தடுப்பு:: சர்வே ஆப் இந்தியா நடத்திய ட்ரோன் வான்வெளி சர்வே மூலம் பெறப்பட்ட சொத்தின் நேரடி புகைப்படமும் இதில் இடம்பெறுகிறது. தனிநபர் கட்டடங்கள் மட்டுமின்றி, பல உரிமையாளர்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் பிளாட் எண், தளம், குடியிருப்பு அல்லது வணிகப் பயன்பாடு, சூப்பர் பில்ட் -அப் ஏரியா, பார்க்கிங் மற்றும் கேரேஜ் பரப்பளவு ஆகியவை மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்படுகின்றன.

சொத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பக்கத்து கட்டட அமைப்புகளுடன் கூடிய நேரடிப் படம் இணைக்கப்படுவதால் போலி ஆவணப் பதிவுகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

சட்டப்பூர்வ அங்கீகாரம்:: புதுச்சேரி நில மானிய விதிகள் இந்த அட்டையைப் பயனாளிகள் வங்கிகளில் கடன் பெறவும், பிற அரசு சலுகைகளைப் பெறவும் அதிகாரப்பூர்வ நிதிச் சொத்தாகப் பயன்படுத்த சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. துல்லியமான வரைபடம் மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளதால் நில ஆக்கிரமிப்புகள் மற்றும் போலி ஆவண மோசடிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, வங்கிகளில் கடன் ஒப்புதல் விரைவாகக் கிடைக்கும்.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுக்குத் தங்களுக்குரிய தளம், பரப்பளவு மற்றும் பார்க்கிங் உரிமைகளுக்கான தனித்துவமான சட்டப்பூர்வ சான்று கிடைக்கும். அரசு நிர்வாகத்திற்கு நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களைச் சிறப்பாக வகுக்கவும், சொத்து வரி விதிப்பைச் சீரமைக்கவும் இது பெரும் உதவியாக இருக்கும்.

எல்லைப் பிரச்னைகள் குறையும் என்பதால் நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கையும் பெருமளவு குறையும். முருகம்பாக்கம் வருவாய் கிராமத்தில் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னோடித் திட்டம், விரைவில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

ஒருங்கிணைந்த விபரங்கள்: உரிமையாளரின் புகைப்படம், பங்கு விகிதம், அடையாளச் சான்றுகளான பான் கார்டு, ரேஷன் கார்டு போன்றவை, தொலைபேசி எண் மற்றும் தொடர்பு முகவரி ஆகியவை புதிய சொத்துரிமை அட்டையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொத்தின் மீதுள்ள வங்கி அடமானங்கள், வில்லங்கங்கள், குத்தகை உரிமைகள், பட்டா விவரங்கள் மற்றும் ஜி.எல்.ஆர் மதிப்பு ஆகியவையும் துல்லியமாகக் குறிப்பிடப்பட உள்ளன. சொத்து கைமாறும்போது அல்லது உரிமையாளர் பெயர் மாற்றப்படும்போது செய்யப்படும் திருத்தங்கள் தெளிவாகப் பராமரிக்கப்படும். விசாரணை அதிகாரியின் டிஜிட்டல் கையொப்பம் மற்றும் சொத்தின் உண்மைத்தன்மையை இணையவழியில் உடனடியாகச் சரிபார்க்க கியூ.ஆர் கோடு மற்றும் யு.ஆர்.எல் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us