/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி வேடந்தாங்கலுக்கு பறந்து வந்த விருந்தாளிங்க... கூடு கட்டும் அழகை காண குவியும் சுற்றுலா பயணிகள்
/
புதுச்சேரி வேடந்தாங்கலுக்கு பறந்து வந்த விருந்தாளிங்க... கூடு கட்டும் அழகை காண குவியும் சுற்றுலா பயணிகள்
புதுச்சேரி வேடந்தாங்கலுக்கு பறந்து வந்த விருந்தாளிங்க... கூடு கட்டும் அழகை காண குவியும் சுற்றுலா பயணிகள்
புதுச்சேரி வேடந்தாங்கலுக்கு பறந்து வந்த விருந்தாளிங்க... கூடு கட்டும் அழகை காண குவியும் சுற்றுலா பயணிகள்
UPDATED : டிச 21, 2025 06:58 AM
ADDED : டிச 21, 2025 06:08 AM

வானம் மண்ணில் இறங்கி வந்து நீல நிறத்தில் தவம் கிடப்பதைப் போலக் காட்சியளிக்கிறது புதுச்சேரியின் ஊசுட்டேரி. 800 எக்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் இந்த ஏரி, வெறும் நீர்நிலை மட்டுமல்ல; இது பல்லாயிரக்கணக்கான உயிர் தேவதைகளின் புகலிடம்.தமிழகத்தின் மடியில் 410 எக்டரும், புதுச்சேரியின் தோளில் 390 எக்டருமாகத் தழுவிக் கிடக்கும் இந்த ஏரி, எல்லையைக் கடந்த இயற்கையின் பேரழகாக காட்சியளிக்கிறது.சங்கராபரணி ஆற்றின் தழுவலாலும், வீடூர் அணையின் கருணையாலும் ஊசுட்டேரி உயிர் பெறுகிறது. 540 மில்லியன் கன அடி நீரைத் தன் இதயத்தில் சுமந்திருக்கும் இந்த ஏரி, ஒரு தாயைப் போல பறவைகளுக்கு தாகத்தைத் தணிக்கிறது. நிலத்தடியையும் 'ரீசார்ஜ்' செய்கிறது.
குளிர் காலம் தொடங்கியுள்ளதால் இப்போது ஊசுட்டேரி ஒரு சர்வதேசக் கலைக்கூடமாக மாறியுள்ளது. பல்லாயிரம் மைல்கள் கடந்து, கடல்களையும் மலைகளையும் தாண்டி, ஆஸ்திரேலிய பிளமிங்கோ உள்ளிட்ட பல்வேறு நாட்டு பறவைகள் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றன.
ஒய்யாரமாக நடக்கும் பூநாரைகள், தண்ணீரில் மிதக்கும் மேகங்களாய் கூழைக்கடாக்கள், கூர்மையான அருவாள் மூக்கன்கள் மற்றும் நீருக்குள் நடனமாடும் பாம்புத்தாராக்கள், மூழ்கி மூழ்கி கண்ணாம்மூச்சி காட்டும் நீர்க்காகங்கள் என, ஊசுட்டேரியே வண்ணமயமான சிறகுகளால் போர்த்தப்பட்டு இருப்பதை போன்று காட்சியளிக்கிறது.
வெளிநாட்டு பறவைகள் வெறும் விருந்தினர்களாக மட்டும் ஊசுட்டேரிக்கு வரவில்லை.அவை தம் அடுத்த தலைமுறையை இங்கு உருவாக்குவதற்கான வேலைகளிலும் தற்போது படுபிசியாக உள்ளன.மறுபுறம், உள்ளூர் பறவைகள் காட்டும் சுறுசுறுப்பு நம்மை வியக்க வைக்கும். சிறு குச்சிகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து, மிக மென்மையாகக் கூடு கட்டுவது கொள்ளை அழகாக உள்ளது.
சூரியன் மறையும் வேளையில், பொன்னிறக் கதிர்கள் தண்ணீரில் பட்டுத் தெறிக்கும்போது, பறவைகள் கூட்டமாகத் தன் கூடுகளுக்குத் திரும்புவதும் கண்கொள்ளாக் காட்சி. இந்த அழகிய காட்சிகளைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள், நகரத்தின் இரைச்சலை மறந்து அமைதியின் மடியில் அதிகாலையிலும், அந்திசாயும்போதும் இளைப்பாறி வருகின்றனர்.
பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'ஊசுட்டேரியில் நீர்நிலையும், பறவைகளும் சேர்ந்த இசைக்கச்சேரியை நடத்துகின்றன. இது நவம்பரில் துவங்கி பிப்ரவரி வரை தொடரும். ஒரு சில ஆண்டுகளில் மார்ச் மாதத்தை தாண்டி கூட நீடிக்கும்.முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, தன் பிள்ளைகளுக்குப் பறக்கக் கற்றுக்கொடுக்கும் வரை இப்பறவைகள் ஊசுட்டேரியில் இருக்கும்.
இயற்கை நமக்கு வழங்கிய ஊசுட்டேரியின் பொக்கிஷத்தைப் பாதுகாப்பதும், அந்தச் சிறகுகளின் சுதந்திரத்தைக் கொண்டாடுவதும் நமது கடமையாகும்' என்றனர்.

