மின் கம்பங்களில் உள்ள பேனர்களை ஒரு வாரத்திற்குள் அகற்றிட ‘கெடு’
மின் கம்பங்களில் உள்ள பேனர்களை ஒரு வாரத்திற்குள் அகற்றிட ‘கெடு’
UPDATED : அக் 03, 2026 01:43 AM
ADDED : அக் 03, 2026 01:39 AM
புதுச்சேரி: மின் கம்பங்களில், சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் கம்பி வடங்களை ஒரு வாரத்திற்குள் அகற்றிட வேண்டும் என, மின் துறை எச்சரித்துள்ளது.
புதுச்சேரி மின் துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு;
புதுச்சேரி மின் துறைக்குச் சொந்தமான மின் கம்பங்கள், தெரு விளக்கு கம்பங்களில், விதிமுறைகளை மீறி, சட்ட விரோதமாக தொலைக்காட்சி மற்றும் இணையதள கம்பி வடங்கள் அதிக அளவில் இழுத்துக் கட்டப்பட்டுள்ளன.
இதனால், மின் கம்பங்களில் தாங்க முடியாத சுமை ஏற்பட்டு, கம்பங்கள் சாய்ந்து விழும் அபாயம் உருவாகியுள்ளது. இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
மின்தடை ஏற்படும் நேரங்களில், மின் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ள இடையூறு ஏற்படுகிறது.
எனவே, முறையான அனுமதியின்றி, மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள அனைத்து தொலைக்காட்சி மற்றும் இணையதளக் கம்பி வடங்களையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒரு வார காலத்திற்குள் அகற்றிவிட வேண்டும்.
இல்லையெனில், எவ்வித மறு அறிவிப்புமின்றி, மின்துறையே நேரடியாக அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும். இதனால், நுகர்வோருக்கு ஏற்படும் தொலைக்காட்சி மற்றும் இணையதள சேவை பாதிப்புகளுக்கோ, பொருட்கேடுகளுக்கோ, மின்துறை பொறுப்பேற்காது.
மின் கம்பங்கள் மீது அனுமதியின்றி விளம்பரப் பேனர்கள் கட்டுவதும், மின் இணைப்புப் பெட்டி உள்ளிட்ட மின் கட்டமைப்புகளின் மீது சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசாரங்களை ஒட்டுவது, இந்திய மின்சாரச் சட்ட விதிகளின் படி கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள அனைத்து விளம்பர பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால், அத்துமீறிய வர்த்தக நிறுவனங்கள், விளம்பரப் பேனர்களை மின் கம்பங்களில் கட்டும் முகவர்கள் மீது, காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
