UPDATED : அக் 03, 2026 01:43 AM
ADDED : அக் 03, 2026 01:39 AM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே நர்ஸ் படுகொலை வழக்கில் கலைக்குமார் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த கோபாலன்கடை தனுஷ்கோடி மகள் ஜெயஸ்ரீ 22; நெல்லித்தோப்பு தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாக பணி புரிந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் ரவுடி கலைக்குமார் என்பவரை காதலித்து வந்தார்.
இதற்கிடையே கலைக்குமார் மீது பல்வேறு வழக்குள் இருந்ததால் அவர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் காதலர்களுக்குள் விரிசல் ஏற்பட்டது.
கடந்த தினங்களுக்கு முன், ஜாமினில் வந்த கலைக்குமார், ஜெயஸ்ரீயிடம் பேசுவதற்கு பலமுறை முயற்சி செய்தார். அவர், பேச மறுத்துவிட்டார்.
இந்நிலையில் கொலை நடப்பதற்கு முன், ஒரே பைக்கில் வந்த கலைக்குமார் மற்றும் கூட்டாளியான லோகேஸ்வரன், சதீஷ்குமார் ஆகியோர் ஜெயஸ்ரீ வீட்டின் அருகே சென்றனர். பின், கூட்டாளியின் உதவியுடன் பேசுவதற்கு ஜெயஸ்ரீயை அழைத்துள்ளனர்.
அதன்படி கடந்த 26ம் தேதி மாலை வீட்டில் இருந்த ஜெயஸ்ரீயை வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு சென்றார். இருவரும் தனியாக இருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஜெயஸ்ரீ வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து கலைக்குமார் தப்பிச்சென்றார். இச்சம்பவம் குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, பொறையூரை சேர்ந்த லோகேஷ்வரனை கைது செய்தனர். தலைமறைவான கலைக்குமார், சதீஷ்குமார் ஆகியோரை தனிப்படை அமைத்து தேடினர்.
கடந்த 30ம் தேதி காலை 11:00 மணியளவில் காட்பாடியில் ரயில் முன் பாய்ந்து கலைக்குமார் தற்கொலை செய்துகொண்டார். உடன் சென்ற சதீஷ்குமாரை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே கோபாலன்கடை பால்ராஜ் மகன் சதீஷ்குமாரை, 24, போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில் சேலம் வரையில் இருவரும் சென்ற நிலையில் கலைக்குமார் மனது சரியில்லை சாகபோகிறேன் என கூறியுள்ளார். பின், சதீஷ்குமார் பாத்ரூம் சென்ற நிலையில் அவரை விட்டுவிட்டு கலைக்குமார் மாயமானார்.
பல இடங்களில் கலைக்குமாரை தேடிய சதீஷ்குமார், அங்கிருந்து உளுந்துர்பேட்டைக்கு வந்தபோது, அவரை போலீசர் கைது செய்தனர்.
அதன் பிறகே கலைக்குமார் தற்கொலை செய்துகொண்டது சதீஷ்குமாருக்கு தெரிந்துள்ளது. மேலும் கலைக்குமார், சதீஷ்குமார் ஆகியோருக்கு உதவி செய்த கூட்டாளி நல்லவாடு பிரகாஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
