ADDED : செப் 02, 2026 07:40 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ரவுடி வினோத் (எ) வினோத்குமாரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி, வில்லியனுார், சாமியார்தோப்பு, மல்லிகா தியேட்டர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் வினோத் (எ) வினோத்குமார், 27; பிரபல ரவுடி இவர் மீது அடிதடி, கஞ்சா விற்பனை, மாமூல் வசூல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தற்போது, வில்லியனுாரில் பாபு என்பவர் நடத்தி வரும் அரிசி கடையில் மாமூல் கேட்டு, பீர் பாட்டிலினால் தயாரித்த மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில், ரவுடி வினோத்குமாரை வில்லியனுார் போலீசார் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் உள்ள ரவுடி வினோத் (எ)வினோத்குமார் வெளியே வந்தால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளதால், சிறையில் இருக்கும் வினோத், வெளியே வராதபடி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய போலீசார் கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தனர்.
இதையடுத்து, கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில், ரவுடி வினோத் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து, அதற்கான உத்தரவை காலாப்பட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
