ADDED : செப் 02, 2026 07:40 PM
புதுச்சேரி: ஈஷா யோகா மையம் சார்பில், 18வது கிராமோத்சவம் ‘கிராமப்புற விளையாட்டு திருவிழா’ இரண்டாம் கட்ட போட்டிகள், கடலுார் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலுார், அரியலுார், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் கிராமபுறங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன.
அதில், திருவண்ணாமாலை மாவட்டத்தை சேர்ந்த தென்பள்ளிப்பட்டு அணியும், புதுச்சேரியை சேர்ந்த குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணியும் இறுதி போட்டியில் மோதின.
இதில், குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணி முதலிடம் பிடித்து ரூ. 15 ஆயிரம் பரிசுத் தொகையை வென்றது. தொடரின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட வாரியர்ஸ் அணியை சேர்ந்த காயத்திரிக்கு ரூ. 1.40 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டது.
2ம் இடம் பிடித்த தென்பள்ளிப்பட்டு அணிக்கு ரூ. 12 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டன. விழாவில், கடலுார் மாவட்ட தலைமை நீதிபதி சுபத்திரா தேவி கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
குமாரப்பாளையம் மல்டி ஸ்போர்ட்ஸ் அக்காடமி பவுண்டர் சோமசுந்தரம், காப்பாளர் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியில், முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் கோவை ஈஷா மையம் ஆதியோகி சிலை முன் நடக்கும் ரூ. 5 லட்சம் பரிசு தொகைக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
