/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆண் அழகன் போட்டி குருவிநத்தம் வீரருக்கு தங்கம்
/
ஆண் அழகன் போட்டி குருவிநத்தம் வீரருக்கு தங்கம்
ADDED : டிச 26, 2024 05:51 AM

பாகூர்: சென்னையில் நடந்த ஆண் அழகன் சாம்பியன்ஷிப் போட்டியில், குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் இரண்டு தங்கம் உள்ளிட்ட நான்கு பதக்கங்களுடன், சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
நேஷனல் அமெச்சூர் பாடிபில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு சார்பில், மாவட்ட அளவிலான ஆண் அழகன் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை, திருவெற்றியூரில் நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி மாநிலம், பாகூர் அடுத்த குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்த ஸ்ரீதர், 21, பங்கேற்று, உடலமைப்பு பிரிவு மற்றும் ஜூனியர் பாடி பில்டிங் பிரிவில் தலா ஒரு தங்கப் பதக்கம், சீனியர் பாடி பில்டிங் பிரிவில் இரண்டு வெள்ளி என மொத்தம் நான்கு பதக்கங்களை வென்றார்.
இதன் மூலமாக அவர் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தார். பதக்கம் வென்ற ஸ்ரீதருக்கு, குருவிநத்தம் பெரியார் நகர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று அவருக்கு, வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார். முன்னதாக, ஸ்ரீதர், முன்னாள் எம்.பி., ராதாக்கிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தனியார் கார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வரும் ஸ்ரீதருக்கு, புதுச்சேரி ஐ.ஆர்.பி.என்., போலீஸ் கான்ஸ்டபுள் பானுசந்தர், கடந்த மூன்று ஆண்டுகளாக பாடிபில்டிங் பயிற்சிகளை அளித்து வருகிறார்.