/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பணிக்காக பல்கலைகளில் போலி கல்விச் சான்று
/
அரசு பணிக்காக பல்கலைகளில் போலி கல்விச் சான்று
UPDATED : அக் 23, 2024 07:58 AM
ADDED : அக் 23, 2024 06:09 AM
மதுரை : திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. குரூப் 1 தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சி., 2020 ஜன., 20ல் அறிவிப்பு வெளியிட்டது. பள்ளிக் கல்வி முதல் கல்லுாரி வரை தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டும்,
அதற்குரிய இடஒதுக்கீட்டில் அனுமதிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2021 மார்சில் நீதிபதிகள் அமர்வு, 'தமிழ் வழியில் படித்ததற்கான சலுகை பெற மதுரை காமராஜ் பல்கலையில் சிலர் போலி சான்று பெற்ற விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
இதை நிறைவேற்றாததால் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
'மதுரை காமராஜ் பல்கலை போலவே பிற பல்கலைகளிடமிருந்து விபரங்களை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், நான்கு பல்கலைகளின் பி.எஸ்.டி.எம்., சான்றுகளின் உண்மைத் தன்மையை போலீசாரால் சரிபார்க்க முடியவில்லை' என அரசு வழக்கறிஞர் கூறினார்.
நீதிபதிகள்: அண்ணாமலை பல்கலை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை, சென்னை பல்கலையில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எஸ்.டி.எம்., சான்று பெற்ற 22 பேர் மீது விசாரணை அதிகாரிக்கு சந்தேகம் உள்ளது. அவர்கள் பற்றிய ஆவணங்களை வழங்கக்கோரி லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்கலைகளுக்கு கடிதங்கள் எழுதினர்.
பல்கலைகள் ஒத்துழைக்காததால், போலீசாரால் விசாரணையை முடிக்க இயலவில்லை. விசாரணைக்காக ஆவணங்களை வழங்குவதில் பல்கலைகள் ஒத்துழைக்காதது சட்டப்படி குற்றமாகும்.
இவ்வழக்கில் அண்ணாமலை, மனோன்மணியம் சுந்தரனார், பெரியார், சென்னை பல்கலைகளின் பதிவாளர்களை இந்நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரரர்களாக இணைத்துக் கொள்கிறது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
ஒருவரை நியமித்து இப்பல்கலைகளிடமிருந்து அக்., 28க்குள் தேவையான ஆவணங்கள் பெறப்படுவதை மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., உறுதி செய்ய வேண்டும்.
விபரங்களை சேகரிப்பதில் போலீசாருக்கு மேலும் கால அவகாசம் வழங்க நீதிமன்றம் விரும்பவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களை வழக்கு, தண்டனையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் உள்நோக்குடன் விபரங்களை மறைப்பவர்கள் மீது வழக்கு தொடரலாம்.
பல்கலைகளால் மேலும் தாமதம் ஏற்பட்டால், போலீசார் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை சேகரிக்கலாம். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து போலீஸ் தரப்பில் அக்., 28ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.