/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.10 கோடி கடன் வாங்கி தருவதாக தொழிலதிபரிடம் ரூ. 42.6 லட்சம் மோசடி
/
ரூ.10 கோடி கடன் வாங்கி தருவதாக தொழிலதிபரிடம் ரூ. 42.6 லட்சம் மோசடி
ரூ.10 கோடி கடன் வாங்கி தருவதாக தொழிலதிபரிடம் ரூ. 42.6 லட்சம் மோசடி
ரூ.10 கோடி கடன் வாங்கி தருவதாக தொழிலதிபரிடம் ரூ. 42.6 லட்சம் மோசடி
ADDED : மார் 18, 2024 03:07 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ. 10 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ. 42.6 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வி.சி.கட்சி பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் சாம் உம்மன் வர்கீஸ், 36; கடந்த 10 ஆண்டிற்கு முன்பு மூலக்குளம், எம்.ஜி.ஆர். நகர், 2வது குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். புதுச்சேரி வி.சி., கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் உழவர்கரை தொகுதியில் வி.சி., கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.
சாம் உம்மன் வர்கீசுடன் பழக்கம் ஏற்பட்ட கேரளா, இடுக்கி மாவட்டம் பச்சடி அம்படில் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அனிஷ்குமார், 48; தொழில் துவங்க கடன் பெற உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அதிக பணம் உள்ளது. அவரிடம் இருந்து ரூ. 10 கோடி கடன் பெற்று தருகிறேன் என உறுதி அளித்துள்ளார். மேலும், தான் உழவர்கரை தொகுதியில் வி.சி., கட்சி சார்பில் போட்டியிடுவதாகவும், வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகிவிட்டால் 2024 லோக்சபா தேர்தலில் எம்.பி., சீட் தருவதாக வி.சி.கட்சி தலைமை உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வி.சி., கட்சி தலைவர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வீடியோக்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதை நம்பி சாம் உம்மன் வர்கீஸ் கேட்கும் தொகையை கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 செப்., வரை அனிஷ்குமார் லாஸ்பேட்டை ஓட்டலில் சந்தித்து பல்வேறு தவணைகளில் ரூ. 42.6 லட்சம் பணம் கொடுத்தார்.
அதன்பிறகு கடன் தொகை கேட்டபோது, வாங்கி தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார். தான் கொடுத்த கமிஷன் பணத்தை திருப்பி கேட்டபோது அந்த பணத்தையும் தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அனிஷ்குமார், இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடி வழக்குப் பதிந்து வி.சி. கட்சி பிரமுகர் சாம் உம்மன் வர்கீசை தேடி வருகின்றனர்.

