/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து நிறுவன தலைமையகத்திற்கு 'சீல்'
/
போலி மருந்து நிறுவன தலைமையகத்திற்கு 'சீல்'
ADDED : டிச 06, 2025 02:06 AM

புதுச்சேரி: நாட்டின் பிரபலமான மருந்து நிறுவனமான சன் பார்மா, தங்கள் நிறுவன தயாரிப்பு மருந்துகளை, புதுச்சேரியில் போலியாக தயாரித்து விற்பதாக சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தது.
போலீசார் விசாரித்தனர். அதில், மதுரையை சேர்ந்த ராஜா, பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து நாடு முழுதும் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
அதன்படி, போலி மருந்து தயாரித்தது தொடர்பாக, சீர்காழியை சேர்ந்த ராணா, காரைக்குடியை சேர்ந்த மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர். ராஜா, விவேக் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கைதான இருவர் அளித்த தகவலில், ராஜா போலி மருந்துகள் தயாரித்த குருமாம்பேட், மேட்டுப்பாளையம் ஆகிய இடங் களில் மூன்று கிடங்குகள் மற்றும் திருபுவனைபாளையத்தில் மூடியிருந்த, 'லார்வன்' கம்பெனியை உடைத்து அதிரடி சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள், மூல பொருட்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்து, 'சீல்' வைத்தனர்.
மேலும், ஏழு இடங்களில் சோதனை நடத்த கோர்ட்டில் அனுமதி பெற்ற சி.பி.சி.ஐ.டி., போலீசார், டிச., 3ம் தேதி புதுச்சேரி நகரின் மைய பகுதியான செட்டி தெருவில் இயங்கி வந்த போலி மருந்துகளின் தலைமையகமான, 'பார்ம் ஹவுஸ்' மற்றும் 'ஸ்ரீ சன் பார்மா' அலுவலகம் மற்றும் கிடங்குகளில் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உதவியுடன் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர்.
அதில், 36 நிறுவனங்களின் ஆயிரம் வகை மருந்துகளை, 1க்கு 4 விகிதத்தில் போலி மருந்து தயாரித்து வினியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, நேற்று மாலை போலி மருந்துகளின் தலைமையகமான பார்ம் ஹவுஸ், 'ஸ்ரீ சன் பார்மா' ஆகிய நிறுவனங்களில் இருந்த 30 கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர்.
அங்கு பணியில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியேற்றி விட்டு, 1,000 வகை மருந்துகளை கிடங்கில் வைத்து, தலைமை அலுவலகத்திற்கு 'சீல்' வைத்தனர். அதேபோன்று, பூர்ணாங்குப்பம் மற்றும் இடையார்பாளையத்தில் இருந்த கிடங்குகளையும் பூட்டி சீல் வைத்தனர்.

