புதுச்சேரியில் சூறைகாற்றுடன் கனமழை: மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு
புதுச்சேரியில் சூறைகாற்றுடன் கனமழை: மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு
UPDATED : செப் 21, 2026 10:52 PM
ADDED : செப் 21, 2026 10:45 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ததால் நகரப்பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுச்சேரியில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மாலையில் வானம் மேகம் மூட்டதுடன் காணப்பட்டது. பின் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் முத்தியால்பேட்டை சோலை நகர் மீனவ கிராம கடல் பகுதியில் சுழல் காற்று உருவானது. இதேபோல், பலத்த சூரை காற்று வீசியதால் மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., எதிரே இருந்த மரம், சாலையின் குறுக்கே வேருடன் விழுந்தது.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்த கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரக் கிளைகளை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த கனமழையால் எப்போது பிசியாக இருக்கும் புதுச்சேரி கடற்கரை சாலை பொதுமக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கனமழையால் சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
