/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீவிர துப்புரவு பணியால் ஹெலிபேடு மைதானம் 'பளிச்'
/
தீவிர துப்புரவு பணியால் ஹெலிபேடு மைதானம் 'பளிச்'
ADDED : பிப் 16, 2025 05:27 AM

புதுச்சேரி: பிளாஸ்டிக் குப்பை மேடாக இருந்த லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் தீவிர துப்புரவு பணியால் மீண்டும் புதுபொலிவு பெற்றது.
பெஞ்சல் புயலின்போது ஏராளமான மரங்கள் லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முறிந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் மீண்டும் பசுமையை ஏற்படுத்த 'தினமலர்' நாளிதழ் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஹெலிபேடு மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
மரக்கன்று நடும் திட்டத்தையொட்டி, ெஹலிபேடு மைதானம் முழுவதும் தீவிர துப்புரவு முகாம் நேற்று நடந்தது. துப்புரவு முகாமை சிறப்பு விருந்தினர்கள் புதுச்சேரி நீதிபதி தாமோதரன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய இயக்குநர் செல்வராஜ், லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லுாரி தலைவர் சந்தீப் ஆனந்த், தலைமை நிர்வாக அதிகாரி அன்பு, என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங் கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ெஹலிபேடு மைதானத்தில் தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
ெஹலிபேடு மைதானம் முழுதும் பீர், விஸ்கி, பிராந்தி பாட்டீல்கள் பிளாஸ்டிக் கப்புகள், கேரி பேக்குகள், ஐஸ்கீரிம் கப்புகள், கேக் அட்டை பெட்டிகள், டீ கப்புகள், ஹான்ஸ், சிகரெட் உள்ளிட்ட போதை பாக்கெட்கள் முகம் சுளிக்கும் வகையில்சிதறி கிடந்தன. அவற்றையெல்லாம் மாணவர்கள் சேகரித்து அப்புறப்படுத்தினர்.
இந்த தீவிர துப்புரவு முகாமில் மொத்தம்2 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இவற்றை உழவர்கரை நகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்றனர். தீவிர துப்புரவு பணியால் குப்பை கூளங்கள், பிளாஸ்டிக் பொருட்கள்பிடியில் சிக்கி இருந்த லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் முழுவதுமாக மீண்டு, பளீச்சென காணப்பட்டது. மாணவர்களின் முயற்சியை பொதுமக்கள் பாராட்டினர்.
தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுாண்டியை அந்தந்த கல்லுாரி நிர்வாகங்களே வழங்கின.
தீவிர ரோந்து தேவை
ெஹலிபேடு மைதானம் உள்ளிட்ட பொதுவெளியில் மது அருந்துவது சட்டப்படி தவறு. அதுவும் சாலையில் அருந்தி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினால், புதுச்சேரி போலீஸ் சட்டம் -1966 பிரிவு 34-இ கீழ், ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்க சட்டத்தின் வழிவகை உண்டு.
அப்படி இருக்கும்போது எந்த சட்டத்தை பற்றியும் கவலைப்படாமல் சமூக விரோதிகள் பொழுது சாய்ந்ததுமே ஹெலிபேடு மைதானத்தில் கையில் சரக்குடன் கும்பல் கும்பலாக அமர்ந்து இரவு முழுவதும் மது அருந்துகின்றனர்.
பின்னர் காலி பாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இப்படி துாக்கி வீசப்படும் மதுபாட்டில்கள் உடைந்து சிதறி கிடக்கின்றன. இது அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், விளையாட்டு வீரர்களின் பாதங்களை பதம் பார்க்கிறது.
அத்துடன் தாங்கள் உண்ட சிக்கன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை வீசி செல்கின்றனர். இக்கழிவுகளை சாப்பிட கூட்டம், கூட்டமாக சுற்றித் திருயும் தெருநாய்கள், வாக்கிங் செல்வோரை துரத்தி கடிக்கின்றன.
ஏர்போர்ட்டில் இருந்து 200 மீட்டர் துாரத்தில் தான் ஹெலிபேடு மைதானம் உள்ளது. அப்படி இருக்கும்போது ஏர்போர்ட்டிற்கு அருகே அதுவும் கல்வி நிறுவனங்கள் மத்தி யில் உள்ள ெஹலிபேடு மைதானத்தில் மது அருந்த யார் அனுமதி கொடுத்தது. இதனை ஏன் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.
இடத்தின் உரிமையாளரான கல்வி துறை என்னசெய்கிறது. ஏர்போர்ட்டிற்கு வரும், வெளி யூர் சுற்றுலா பயணிகள் ஹெலிபேடு மைதானத்தை கடந்து தான் புதுச்சேரிக்குள் நுழைகின்றனர்.
அப்படி இருக்கும்போது திறந்த வெளியில் மது அருந்துவது மாநிலத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் லாஸ்பேட்டை போலீசார் கண்டும் காணாமல் உள்ளது வியப்பாக உள்ளது. இனிமேலாவது இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி மைதானத்தில் குடிப்பவர்களை விரட்டியடிக்க வேண்டும்.
பொதுமக்கள் குப்பைகளை மைதானத்தில் வீசா மல், சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
மாடுகள் உலா: பீதியில் மக்கள்
ெஹலிபேடு மைதானத்தில் உடல் ஆரோக்கியதற்கான பொதுமக்கள் வாக்கிங் வருகின்றனர். ஆனால் மைதானத்தில் கும்பலாக சுற்றித் திரியும் கால்நடைகளால் மாணவர்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒன்றையொன்று சண்டை போட்டுக்கொண்டு சிதறி ஓடும் போது, பயிற்சி எடுக்கும் மாணவர்கள் மீது பாய்கின்றன.
உழவர்கரை நகராட்சி மாடுகளை பிடித்து அப்புறப்படுத்திய போதிலும் மீண்டும் கால்நடைகள் மைதானத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.
இவற்றின் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை. உரிமையாளர்கள் கால்நடைகளை வந்து பார்ப்பதும் இல்லை. இவை மைதானத்திலேயே எந்த நேரமும் சுற்றி திரிகின்றன.
கால்நடைகளை திரிய விடுவது சட்டப்படி தவறு. கால்நடைகளை பறிமுதல் செய்வதோடு, உரிமையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

