/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜன. 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்
/
ஜன. 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்
ADDED : டிச 17, 2024 05:33 AM

போக்குவரத்து போலீஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜன. 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என்பதை வலியுறுத்தும் விதமாக போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பைக் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உச்சநீதிமன்றம் ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் கடந்த 2019 ம் ஆண்டு பிப்., 11ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என அப்போதைய டி.ஜி.பி., சுந்தரி நந்தா உத்தரவிட்டார். ஹெல்மெட் முழுதும் விற்று தீர்ந்த சில மாதங்கள் கழித்து அப்போதைய முதல்வர் நாராயணசாமி, ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார். அதன் பின்னர் ஹெல்மெட் கெடுபிடி விலக்கி கொள்ளப்பட்டது.
உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (மோர்த்) வாகன விபத்துக்களை தடுக்க ஹெல்மெட் கட்டாயமாகவும், அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி வருகிறது. இதனால் ஜன. 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என போக்குவரத்து போலீசார் பள்ளி கல்லுாரிகள், கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஜன., 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் எதிரில் நடந்தது.
சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி.,மோகன்குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் கோகுலக்கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர். போலீஸ் பேண்ட் இசை குழு மற்றும் கையேடு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.