விளையாட்டு இட ஒதுக்கீடு விவகாரம் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
விளையாட்டு இட ஒதுக்கீடு விவகாரம் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ADDED : அக் 17, 2026 02:27 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் விளையாட்டுத் துறை இட ஒதுக்கீடு தொடர்பான அவசர வழக்கை விசாரித்த ஐகோர்ட், புதுச்சேரி அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 1 சதவீத இட ஒதுக்கீட்டில், இதற்கு முன்பு இருந்த 65 விளையாட்டுகள் என்ற எண்ணிக்கையை அரசு மறுபரீசீலனை செய்து 35 ஆகக் குறைத்தது.
இது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மருத்துவப் படிப்புத் தகவல் குறிப்பேட்டில் 35 விளையாட்டுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதால், அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் எனவும், அதேசமயம் நீட் தேர்வு அல்லாத கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான அடுத்த கட்ட கலந்தாய்வில் பழையபடி 65 விளையாட்டுகளுக்கான இட ஒதுக்கீட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என, தெரிவித்திருந்தார்.
நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், தாங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று முறையான சான்றிதறகளைப் பெற்றுள்ளதாகவும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கலந்தாய்வு பாதியிலேயே விதிகளை மாற்றியது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என, குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தங்களை விடக் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் இது சட்டவிரோதமானது என்றும், கடந்த அக். 9 ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துவிட்டு, ஸ்டிரே வேகன்சி ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., இடங்களை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன், நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஞானசேகர் ஆஜராகி வாதிட்டார். மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, உயர்கல்வித்துறை செயலர், இயக்குநர், விளையாட்டுத்துறை இயக்குநர், சென்டாக் கன்வீனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ஏற்கனவே விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்ட இடங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டவை என்றும், விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் ஏற்கனவே கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கும் சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு அமர்வு தள்ளிவைத்தது.
