/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொல்லைப்புற பணி நியமனத்தில் மீண்டும் ஐகோர்ட் அதிரடி; தலைமை செயலர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
/
கொல்லைப்புற பணி நியமனத்தில் மீண்டும் ஐகோர்ட் அதிரடி; தலைமை செயலர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
கொல்லைப்புற பணி நியமனத்தில் மீண்டும் ஐகோர்ட் அதிரடி; தலைமை செயலர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
கொல்லைப்புற பணி நியமனத்தில் மீண்டும் ஐகோர்ட் அதிரடி; தலைமை செயலர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஜூன் 23, 2025 04:38 AM
புதுச்சேரி : கொல்லைப்புற பணி நியமனம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட், தலைமை செயலர் மூன்று வாரத்திற்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் எந்த ஆட்சி நடந்தாலும் கொல்லைப்புற நியமனம் தொடர் கதையாகி வந்தது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு வேலை கொடுக்காமல், தெரிந்தவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டு வந்தனர்.இது தொடர்பாக பொதுப்பணித் துறை வாரிசுதாரர்கள் சங்கம் சார்பில், 10 பேர் ஐகோர்ட்டில் கடந்த 2023ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தனர்.
அதில், கொல்லைப்புற நியமனத்தால் இட ஒதுக்கீடு பாதிக்கப்பட்டு வருகிறது. பணியின்போது இறந்த ஊழியர்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடு 25 ஆண்டுகளாக தரப்படவில்லை.இது தொடர்பாக பல முறை கோரிக்கை வைத்தும், பல கட்ட போராட்டம் நடத்தியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு எங்களது உரிமை பெற்று தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இந்த வழக்கில் கோர்ட் இதுவரை மூன்று முறை இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டின் முதல் உத்தரவில், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் கொல்லைப்புற நியமனம் செய்யப்பட்ட 800 பேரை நீக்க உத்தரவிட்டது.
இரண்டாவது உத்தரவில், அனைத்து துறைகளிலும் கொல்லைப்புற நியமனம் தொடர்பாக பட்டியல் தயாரித்து சமர்ப்பிக்க உத்தரவிட்டது. மூன்றாவது உத்தரவில், கொல்லைப்புற நியமனம் தொடர்பாக ஏன் பட்டியல் சமர்பிக்கப்பட்டவில்லை. குறிப்பாக பொதுப்பணித் துறையில் உள்ள 1,500 பேரின் பட்டியலை ஒப்படைக்கவில்லை என கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கு அண்மையில் மீண்டும் ஐகோர்ட்டில் நீதிபதி பட்டு தேவானந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை சரியாக பின்பற்றாமல் இருப்பதால் புதுச்சேரி தலைமை செயலர் உடனடியாக, கொல்லைப்புற நியமனம் புதுச்சேரியில் இல்லை என்ற பிரமாண பத்திரத்தினை மூன்று வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்யாவிட்டால் அவர் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இவ்வழக்குஅடுத்த மாதம் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.