/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
16, 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு
/
16, 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு
ADDED : ஜன 11, 2025 06:22 AM
புதுச்சேரி : பொங்கல் பண்டிகையொட்டி வரும் 16, 17 ஆகிய தேதிகளில் அரசு அலுவலகங்களுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. அடுத்த 15, 18 மற்றும் 19 தேதிகள் அரசு விடுமுறை நாட்களாக வருகிறது. எனவே மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான ஜன., 17 ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வரப்பெற்றன. அதையடுத்து வரும் 17ம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவினை சார்பு செயலர் ஷிரன் பிறப்பித்துள்ளார்.
இதேபோல், வரும் 16ம் தேதி உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்காமல், வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் புதுச்சேரி சேர்த்து ஏற்கனவே அரசாணை பிறப்பித்து இருந்தது. அதை மாற்றி தற்போது 16ம் தேதியும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்த விடுமுறை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில், பிப்., 1 மற்றும் 8 ம் தேதி அரசு அலுவலகங்கள் இயங்கும்.
இதன் மூலம் தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை கிடைக்கும்.