ADDED : டிச 07, 2024 07:31 AM

புதுச்சேரி: ஊர்க்காவல் படை உதய நாள் விழா 33 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.
இந்தியாவில், ஊர்காவல் படை 1965ம் ஆண்டு உதயமானது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி ஊர்க்காவல் படை விழாவை கொண்டாடி வந்தனர். இந்த விழா, புதுச்சேரியில் கடந்த 1991ம் ஆண்டு வரை கொண்டாடப்பட்டது. அதன்பின், உதயநாள் விழா, கொண்டாடப்படாமல் இருந்தது.
இது தொடர்பாக, டி.ஜி.பி., ஷாலினிசிங் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து, 33 ஆண்டுக்கு பிறகு ஊர்க்காவல் படை உதயநாள் கொண்டாட போலீஸ் துறை அனுமதி அளித்தது.
அதையடுத்து, நேற்று கோரிமேடு, போலீஸ் மைதானத்தில், ஊர்க்காவல் படை உதயநாள் விழா நடந்தது. டி.ஜ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கினார். அவருக்கு ஊர்க்காவல் படை சார்பில், அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
விழாவில் டி.ஐ.ஜி., பேசுகையில், 'ஊர்க்காவல் படையினருக்கு 64 நாட்கள் பயிற்சியில், அணி வகுப்பு, சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஊர்க்காவல் படையினருக்கு சிறப்பாக பயிற்சி கொடுத்த, கமாண்டரை டி.ஐ.ஜி., பாராட்டினார்.
சிறப்பு விருந்தினர்களாக டி.ஐ.ஜி., பிரிஜேந்திரகுமார், சீனியர் எஸ்.பி.,க்கள் நாரா சைதன்யா, கலைவாணன் பங்கேற்றனர், ஊர்க்காவல்படை எஸ்.பி., ரங்கநாதன் உட்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.