/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கு நேர்மை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் முக்கியம்' சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு
/
'உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கு நேர்மை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் முக்கியம்' சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு
'உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கு நேர்மை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் முக்கியம்' சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு
'உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கு நேர்மை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் முக்கியம்' சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு
ADDED : ஜன 07, 2024 04:47 AM
புதுச்சேரி: உயர்ந்த இடத்திற்கு செல்ல நேர்மை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் முக்கியம் என, இஸ்ரோ சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கூறினார்.
புதுச்சேரி, ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடந்த 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சாரியா கல்வி குழுமம் இணைந்து நடத்திய மெகா வினாடி வினா இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கிய இஸ்ரோ சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேசியதாவது:
இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்கும்போது நிறைய விழிப்புணர்வு கிடைக்கும். அடுத்த நிலைக்கு செல்ல வாய்ப்பும் கிடைக்கும்.
நாசா செல்ல வினாடி -வினா போட்டி என்றால், மாணவர்களுக்கு அதுபற்றிய தகவல்கள் தெரிந்திருக்கும். நான் படிக்கும் காலத்தில் இதுபோன்ற விழிப்புணர்வு ஏதும் இல்லை. வெறும் படிப்பு மட்டுமே தெரியும். தற்போது எல்லா பள்ளிகளும் மாணவர்களுக்கு, படிப்பை தாண்டி பல திறமைகளை கற்று கொடுக்க ஆர்வம் காட்டுகின்றன. வெற்றிக்கு முதல்படி இதுபோன்ற போட்டியில் பங்கேற்பது.
சந்திரயான் -2 தோல்வி அடைந்தபோது, முயற்சியை கைவிடவில்லை. பள்ளியில் சில மாணவர்கள் படிப்பில் ஆர்வமாக இருப்பர். சிலர் வேறு விஷயங்களில் ஆர்வமாக இருப்பர். எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் திறமையை வளர்த்து கொள்ளுங்கள். எல்லோரும் தங்களை படிப்புடன் ஒப்பிட்டு கொள்ளாதீர்கள்.
இன்று எல்லா துறைகளும் முக்கியமானவை. விண்வெளி, பொறியாளர், டாக்டர் பணிகள் மட்டும் தான் முக்கியம் இல்லை. சின்ன சின்ன தச்சு தொழில், தோட்டம் அமைப்பது கூட முக்கியமானது. ஆனால் செய்யும் பணியை 100 சதவீத முழு ஈடுபாட்டுடன் செய்யும் திறமையை வளர்த்து கொள்வது முக்கியம்.
படிக்கும்போது சின்ன சின்ன புராஜெக்ட் செய்யுங்கள். போட்டி நடக்கிறது என்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என திட்டமிட வேண்டும். அது பின்னாளில் வேலைக்கு செல்லும்போது, டீம் ஒர்க்கிற்கு உதவும்.
அமெரிக்காவின் நாசாவிற்கு செல்ல கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். அங்குள்ள கென்னடி விண்வெளி மையத்திற்கு சென்று பாருங்கள். நாசா மட்டும் இன்றி இஸ்ரோவுக்கும் வந்து பாருங்கள். இங்கும் ஏராளமான சென்டர்கள் உள்ளன.
சந்திரயான் 3 நிலவுக்கு அனுப்ப அங்குள்ள கனிமங்கள் கண்டறிதல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சாப்ட் லேண்டர் பயன்படுத்தி நிலவின் தென் பகுதி சென்ற முதல் நாடு என்பதால், சந்திரயான் 3 திட்டம் மாணவர்களிடம் அதிக அளவில் பிரபலமானது.
பூமியில் இருந்து நிலவு 4 லட்சம் கி.மீ., துாரத்தில் உள்ளது. அதனால் நம் முதல்படி நிலவுக்கு செல்வது. பூமி சூரியனையும், நிலவு பூமியையும் சுற்றி வருகிறது. நிலவில் மனிதன் வாழ முடியும் என்றால், அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு எளிதாக செல்ல முடியும்.
பூமியில் இருந்து ஒரு பொருளை விண்ணுக்கு செலுத்துவதற்கும், நிலவில் இருந்து ஒரு பொருளை வேறு கிரகத்திற்கு அனுப்பும் சக்தியை ஒப்பிடும்போது, நிலவில் இருந்து ஒரு பொருளை விண்ணுக்கு அனுப்ப 25 சதவீத சக்தி இருந்தால் போதும். அதனால் நிலவில் ராக்கெட் ஏவுதளத்தை கட்ட முடிந்தால், அங்கிருந்து எளிதாக வேறு கிரகத்திற்கு குறைந்த சக்தியுடன் ராக்கெட் செலுத்த முடியும்.
பூமியில் இருந்து செவ்வாய் கிரகம் செல்ல அதிக சக்தி தேவை. ஆனால், பூமியை சுற்றி வரும் நிலவு, செவ்வாய் அருகில் வரும்போது நிலவில் இருந்து செல்வது எளிது. இதுபோல் பல விஷயங்கள் உள்ளன. உங்களை போன்று நானும் இருந்தேன். எல்லோராலும் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். அதற்கு, நேர்மை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் முக்கியம்
இவ்வாறு வீரமுத்துவேல் பேசினார்.