ADDED : நவ 25, 2025 05:36 AM
புதுச்சேரி: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக் காரணமாக புதுச்சேரியல் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நாவற்குளம், குருசித்தானந்தா வீதியை சேர்ந்த ஷகிதாபானு என்பவர் வீட்டில் மின்னல் தாக்கியது. அதில், வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. வீட்டின் சுற்றுச் சுவர் சேதமடைந்தது. அருகில் இருந்த தென்னை மரம் தீபிடித்து எரிந்தது.
இதேபோன்று, அரியாங்குப்பம் காலந்தோட்டம் முருகன் கோவில் எதிரில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியில் தென்னை மரம் உரசியதில் தென்னை மரம் தீ பிடித்து எரிந்தது. உடன் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. , தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீ யை அணைத்தனர்.
இரவு முழுவதும் மழை பெய்ததால், நேற்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் மழையின்றி வானம் மேக மூட்டத்துடனே காணப்பட்டது.

