மனைவிக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
மனைவிக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
UPDATED : ஆக 18, 2026 06:35 PM
ADDED : ஆக 18, 2026 05:31 PM
வில்லியனுார்: திருக்கனுார் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கரும்பு ஆலை ஊழியர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கானை அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கீதா, 33. இவருக்கும், திருக்கனுார் அடுத்த செட்டிபட்டு, மேட்டு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் கோவிந்தராஜ், என்பவருக்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்தது.
கோவிந்தராஜ் முண்டியம்பாக்கம் கரும்பு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்தின்போது கீதாவிற்கு 25 சவரன் நகைகள், மாப்பிள்ளைக்கு 5 சவரன் நகை மற்றும் கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டுக்கு உபயோகப் பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு கூடுதல் நகை, பணம் கேட்டு கோவிந்தராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கீதாவை துன்புறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கோவிந்தராஜிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணிற்கும், கள்ளத்தொடர் இருந்ததை கீதா தட்டி கேட்டதால் கணவர் மற்றும் குடும்பத்தினர் கீதாவை அடித்து துன்புறுத்தி, கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினர்.
இது குறித்து கீதா நேற்று முன்தினம் வில்லியனுார் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கணவர் கோவிந்தராஜ், மாமனார் ராமசாமி, மாமியார் மங்கையர்கரசி உட்பட நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
