/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் முதல் மாணவர் போராட்டம் அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
/
புதுச்சேரியில் முதல் மாணவர் போராட்டம் அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
புதுச்சேரியில் முதல் மாணவர் போராட்டம் அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
புதுச்சேரியில் முதல் மாணவர் போராட்டம் அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
ADDED : ஜூலை 20, 2025 01:25 AM
படிக்கும் நேரத்தில் மாணவர்களுக்கு அரசியல் தேவையா என்று ஒருபக்கம் விவாதங்கள், எதிர்ப்புகள் எழுந்தாலும், மற்றொரு பக்கம் உலக, சமூக பிரச்னைகளில் புதுச்சேரி மாணவர்கள் ஓங்கி குரல் கொடுக்காமல் இருந்ததில்லை.
சமூகத்தை பாதிக்கும் எந்த பிரச்னை என்றாலும், வகுப்புகளை புறக்கணித்து, ஆர்ப்பாட்டம் நடத்தி, தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து உரிமையை நிலைநாட்டாமலும் இருந்ததில்லை. அப்படி தான் பல ஆண்டுகளாகவே மண்ணிற்கும் மாணவர்களுக்கும் போராட்ட உணர்வு தொடர்ந்து வந்திருக்கிறது.
அது சரி... புதுச்சேரியில் முதல் மாணவர் போராட்டம் எது, அது எப்போது, எதற்காக நடந்தது. எதற்காக அந்த எழுச்சி எழுந்தது என்று தெரியுமா.... அது தான் காந்தி குல்லாய் போராட்டம். 1915ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தியடிகள் இந்தியா திரும்பிய நேரத்தில், நாடு முழுதும் சுதந்திர தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது. காந்தியடிகளின் வருகை மக்களிடம் இந்திய அளவில் புத்தெழுச்சியை ஏற்படுத்தியது.
காந்தியடிகள் 1921ல் அறிவித்த காந்திய கொள்கையை முழு மனதோடு ஏற்று, அப்படியே உணர்வாக கலந்தனர். தேசியவாதிகளாக உருவெடுத்தனர். கதர் ஆடையையும், காந்தி குல்லாயை அணிந்து கொண்டு தேசிய விடுதலைக்காக வீதிகளில் ஆங்கிலேயேர்களின் அடக்குமுறையை எதிர்த்து வீறு நடை போட்டனர்.
ஜவஹர்லால் நேரும் காந்தி குல்லாவை தவறாமல் அணிய இந்தியா முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் இந்த குல்லா பிரபலமானது. புதுச்சேரி மக்களிடமும், மாணவர்களிடம் காந்திய கொள்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தேசிய உணர்வை வெளிப்படுத்தும் விதமாக காந்தி குல்லா அணிந்து வகுப்பிற்கு சென்று மிடுக்காக அமர்ந்தனர்.
புதுச்சேரியின் பிரபல பள்ளியில், 1922ம் ஆண்டில் ஒருநாள் இப்படி காந்தி குல்லாவை அணிந்தபடி மாணவர் ஒருவர் விளையாடி கொண்டு இருந்தார். அதனை கண்ட பாதிரியார், அந்த மாணவரை அழைத்து என்ன குல்லா போட்டுள்ளாய் என்று கேட்டார். அதற்கு அம்மாணவர், காந்தி குல்லா போட்டுள்ளேன் என்றதும், அவருக்கு கோபம் கொப்பளித்தது.
எதற்காக இந்த குல்லா அணிந்து வந்தாய். அதனை வெளியே வீசிவிட்டு வகுப்பிற்கு வா, என்று, சத்தம்போட்டு விட்டு அங்கிருந்து சரசரவென வெளியேறி விட்டார். இந்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாணவர் காந்தி குல்லாவை அணிந்து வந்தால் இவருக்கு என்ன என்று சுகாபிவிருத்தினி பத்திரிக்கையும் கண்டித்தது. இந்த சம்பவத்தை கலவை கல்லுாரி மாணவர்கள் கடுமையாகவே எதிர்த்தனர். காந்தி குல்லாவை அணிந்து பள்ளிக்கு வர துவங்கினர். அதனை கண்ட பள்ளி நிர்வாகம் மூன்று மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கியது. இந்நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள ஒட்டுமொத்தமாக பள்ளி மாணவர்களையும் கொந்தளிக்க செய்து விட்டது.
மாணவர்களிடம் பெரும் எழுச்சியை துாண்டிவிட்டது. வகுப்புகளை புறக்கணித்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த காந்தி குல்லா போராட்டம் தான், புதுச்சேரி மாணவர்களின் முதல் மாணவர் போராட்டமாக அமைந்தது என்கின்றனர் புதுச்சேரியின் வரலாற்று ஆய்வாளர்கள்.
உரிமை மறுக்கும்போதெல்லாம் புதுச்சேரி மாணவர்களின் குரல்கள் எப்போதும் அடங்கிபோனதாக சரித்தரம் இல்லை என்பது இன்றும் தொடர்கிறது.