/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலகம் முழுதும் கொடி கட்டி பறந்த புதுச்சேரி ரெடிமேடு ஆடைகள் அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே....
/
உலகம் முழுதும் கொடி கட்டி பறந்த புதுச்சேரி ரெடிமேடு ஆடைகள் அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே....
உலகம் முழுதும் கொடி கட்டி பறந்த புதுச்சேரி ரெடிமேடு ஆடைகள் அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே....
உலகம் முழுதும் கொடி கட்டி பறந்த புதுச்சேரி ரெடிமேடு ஆடைகள் அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே....
ADDED : ஏப் 12, 2025 10:06 PM
இன்றைக்கு பல மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ரெடிமேடு ஆடைகள் வியாபாரத்திற்காக குவிகிறது. நாமும் அவற்றை மிடுக்காக வாங்கி போட்டு அழகு பார்க்கிறோம். ஆனால், 18ம் நுாற்றாண்டில் புதுச்சேரி ரெடிமேடு ஆடைகளுக்கு தான் உலகம் முழுதும் மவுசு.
புதுச்சேரியில் ரெடிமேடு ஆடைகள் தயாரித்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஜவுளி ஏற்றுமதியும் இறக்குமதியும் ஜோராக நடந்துள்ளன. அரபு நாட்டின் துறைமுக பட்டிணமான மொக்கா, மலேசியாவின் கிட்டா, பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலா என, பல நாடுகளில் புதுச்சேரியில் உற்பத்தியான துணிகளை வாங்க போட்டிபோட்டுள்ளனர்.
புதுச்சேரியிலும் மற்ற தமிழக நகரங்களிலும் தயார் செய்யப்பட்ட துணி வகைளுக்கு பிரான்சுதேசம் மிகப் பெரிய சந்தையாக இருந்துள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு புறப்படும் ஒவ்வொரு கப்பலிலும் ஆடைகள் ஏற்றி, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருப்பாதிரிப்புலியூர், பரங்கிபேட்டை, சென்னை பட்டிணம், லாலாபேட்டை ஊழியர்களில் தயாரிக்கப்பட்ட புதுச்சேரியில் இருந்து ஏற்றுமதியாகியுள்ளன.
புதுச்சேரியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட துணிகளுக்கு முக்கிய சந்தையாக மணிலா இருந்துள்ளது. காங்கு தினசு 50 சதவீதம், மட்டரக துணி 20 சதவீதம், பரங்கிபேட்டை பந்தார் தினசு 90 சதவீதம் சென்னை பட்டிணத்தின் பூப்போட்ட மெல்லிய பட்டண சீட்டிகள் 25 சதவீதம் வரை லாபம் ஆனந்த ரங்கப்பிள்ளை தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார் என்றால், புதுச்சேரியின் ஏற்றுமதி சிறப்பினை பார்த்து கொள்ளுங்கள்.
கவர்னரின் மனைவி மதாம் டூப்ளே ஆனந்தரங்கப்பிள்ளையை அழைத்து 1,000 கமிசு சலவை 9.5 நெடு முழத்தில் தைக்க சொல்லியுள்ளார். அத்துடன் 500 கமிசும் சேர்த்து போட சொல்லியுள்ளார். இந்த கமிசு விவகாரம் இத்தோடு நிற்கவில்லை. துய்ப்பிளான் என்ற பிரெஞ்சு வியாபாரி புதுச்சேரிக்கு ஒரு பெரிய ஆர்டர் கொடுத்தார். 1,000 வராகனுக்கு காங்கு புடவை வேண்டும் என்றார்.
அதை கமிசாக தைக்க வேண்டும். கமிசை மசுக்கரைக்கு அனுப்பினால் நல்ல விலைக்கு விற்கும். நல்ல லாபம் கிடைக்கும். உனக்கு எனக்கு சரிபாதி என ஒப்பந்தத்திற்கு வந்துள்ளனர். அந்த அளவிற்கு பிரெஞ்சு ஆட்சியில் புதுச்சேரி ஆடைகள், துணிகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொடி கட்டி பறந்துள்ளது.
ரெடிமேடு ஆடையில் கோலோச்சிய புதுச்சேரியில் இன்றைக்கு ஒரு ஜவுளி பூங்கா கூட கொண்டு வர முடியாமல் அல்லோலப்படுவது வேதனையான விஷயம்.

