25 ஆண்டுகளில் ஒரே ஒரு பதவி உயர்வு ஓய்வு பெறும் முன் தீர்வுக்கு காத்திருப்பு
25 ஆண்டுகளில் ஒரே ஒரு பதவி உயர்வு ஓய்வு பெறும் முன் தீர்வுக்கு காத்திருப்பு
ADDED : அக் 21, 2025 04:55 AM

கோவை: போலீஸ் துறையில் பணி அனுபவம், சாதனைகளின் அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்படும். ஆனால், தங்களது 25 ஆண்டுகள் பணி அனுபவத்தில், ஒரே ஒரு பதவி உயர்வை மட்டும் பெற்று, ஓய்வு பெற இன்னும் சில ஆண்டுகளே உள்ள இன்ஸ்பெக்டர்கள் சிலர், செய்வதறியாது காத்திருக்கின்றனர்.
1994 - 95ம் ஆண்டு காலகட்டத்தில், நேரடி எஸ்.ஐ., க்களாக, 1,320 பேர் தேர்வு பெற்றனர். மருத்துவ தகுதிகளுக்கு பின்னர், 1,198 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவருக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்க வசதி இல்லாததால், 1996ம் ஆண்டு, 500 பேருக்கு முதற்கட்டமாகவும், 1997ல், 600 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும், பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்களில் முதற்கட்டமாக பயிற்சி பெற்றவர்களில் 476, இரண்டாம் கட்ட பயிற்சி பெற்றவர்களில், 550 பேர் பணியில் இணைந்தனர். மொத்தம், 74 பேர் பணியில் சேராத போதும், 98 பேர் பயிற்சிக்கும் அனுப்பப்படவில்லை; பணிநியமனமும் வழங்கப்படவில்லை.
இவர்களுக்கு பின், 1997ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 1,000 பேர் இரண்டு பிரிவுகளாக, 1999 மற்றும், 2000 ஆகிய ஆண்டுகளில் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு பணியில் இணைந்தனர். முதற்கட்ட பயிற்சி பெற்றவர்களில், 406, இரண்டாம் கட்ட பயிற்சி பெற்றவர்களில், 434 என, 840 பேர் மட்டுமே பணியில் சேர்ந்தனர். இதிலும், 160 பணியிடங்கள் காலியாக இருந்தன.
ஆனால், 1994ல் தேர்ந்தெடுக்கப்பட்ட, 98 பேரின் நியமனம் கிடப்பில் போடப்பட்டது. தொடர் கோரிக்கைகளை அடுத்து, 2000ம் ஆண்டு, 98 பேரும் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு பணியில் இணைந்தனர். ஆறு ஆண்டுகள் தாமதமாக பணியில் இணைந்ததால், இவர்களுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இவர்களுடன் பயிற்சி முடித்து பணியில் இணைந்தவர்கள், சீனியர்களாக கருதப்பட்டனர்.
இதுகுறித்து அரசுக்கு சுட்டிக்காட்டிய போதும், 1997ம் ஆண்டு சீனியாரிட்டி கிடைக்கவில்லை. இதனால், 25 ஆண்டுகளில் ஒரே ஒரு பதவி உயர்வை மட்டுமே பெற்று, 98 பேரும் பரிதவித்து வருகின்றனர்.
சீனியாரிட்டி கிடைத்திருந்தால், இவர்களில் பலரும் இன்று ஏ.டி.எஸ்.பி., வரையிலான பதவி உயர்வை பெற்றிருக்க முடியும். ஆனால், இன்னும் இன்ஸ்பெக்டர்களாகவே உள்ளனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் தமிழக அரசு ஏற்கவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள், 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், அதை நிறைவேற்ற உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு மேல்முறையீடு செய்ததால், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்பப்பட்டு அந்த அமர்வு, அரசுக்கு சாதகமாக உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் சென்ற போது, கீழமை நீதிமன்றத்தில் நிவாரணம் பெற அறிவுறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில், 13 பேர் ஓய்வு பெற்று விட்டனர்; ஏழு பேர் உயிரிழந்து விட்டனர். சிலர் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, 98 பேருக்கு 1994 - 95 சீனியாரிட்டியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க, தமிழக முதல்வரின் அனுமதிக்காக, அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிகிறது. தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.