ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவேன்: என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் உறுதி
ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவேன்: என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் உறுதி
UPDATED : செப் 29, 2026 03:56 PM
ADDED : செப் 29, 2026 03:31 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிடும் அசோக் ஆனந்த், தொகுதிக்கு உட்பட்ட கொட்டுபாளையம் பகுதியில் வீடு, வீடாக சென்று ஜக்கு சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதில், அப்பகுதி பொதுமக்களிடம் சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால், சுகாதாரம், கல்வி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்து வருகிறார்.
தொடர்ந்து அசோக் ஆனந்த் கூறுகையில், தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் என்னை தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து அன்பையும், ஆதரவையும் வழங்கி வருகின்றனர். மக்களின் தேவைகள் எனக்கு நன்றாக தெரியும். இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டங்களை கண்டறிந்து, அவற்றிற்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவதே எனது முக்கிய நோக்கம்.
மக்களுக்குத் தேவையான பணிகளை அரசின் திட்டங்கள் மற்றும் அரசுத் துணையுடன் முன்னெடுப்பதோடு, தேவையான இடங்களில் தனது சொந்த நிதியையும் பயன்படுத்தி மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வேன். திட்டங்கள் அறிவிப்பாக மட்டும் இல்லாமல், அவை நடைமுறைக்கு வந்து மக்களுக்கு நேரடியாக பயனளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். தட்டாஞ்சாவடி தொகுதியை மேலும் வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்றவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றவும் நான் மீண்டும் போட்டியிடுகிறேன்.
மக்களுடன் இணைந்து, அவர்களின் தேவைகளை அறிந்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவேன்.
மேலும், தொகுதி மக்களுடன் தொடர்ந்து நேரடியாக தொடர்பில் இருந்து, அவர்களின் குறைகளை உடனுக்குடன் அறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
