/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுாரில் புற்றீசலாக முளைக்கும் சட்ட விரோத பேனர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் அதிகாரிகள்
/
வில்லியனுாரில் புற்றீசலாக முளைக்கும் சட்ட விரோத பேனர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் அதிகாரிகள்
வில்லியனுாரில் புற்றீசலாக முளைக்கும் சட்ட விரோத பேனர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் அதிகாரிகள்
வில்லியனுாரில் புற்றீசலாக முளைக்கும் சட்ட விரோத பேனர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் அதிகாரிகள்
ADDED : ஏப் 08, 2025 03:53 AM
வில்லியனுார்: வில்லியனுார் பகுதியில் சகட்டுமேனிக்கு பேனர்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் குறட்டைவிட்டு துாங்குவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றம் நேரடியாக தலையிட்ட பிறகே, புதுச்சேரி நகரப் பகுதியில் சட்ட விரோத பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேனர்கள் உடனுக்குடன் அகற்றப்படுவதுடன், அவற்றை வைத்தவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகின்றன.
ஆனால், புறநகர் பகுதிகளில் பேனர் கலாசாரம் குறையவில்லை. அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதால், புற்றீசல்போல் தினமும் பேனர்கள் முளைத்து வருகின்றன. குறிப்பாக வில்லியனுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோத பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டு வருகின்றன.
வில்லியனுாரில் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் இருந்து துவங்கி, ஆரியபாளையம் மேம்பாலம் வரை பைபாஸ் சாலையின் இருபுறமும் வரிசையாக சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, வில்லியனுார் நகர சாலைகளிலும் பேனர்கள் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டு வீதிகளின் அழகும் சீர்குலைந்துள்ளது.
கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், சட்ட விரோத பேனர்களை அகற்றாமல் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் உள்ளனர். போலீசாரும் கண்டும் காணாமல் இருக்கின்றனர். தினந்தோறும் இந்த வழியாக செல்லும் அதிகாரிகளுக்கு, சட்ட விரோத பேனர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்திற்குள் தான் வில்லியனுாரும் இருக்கிறது. நகரப் பகுதியில் அதிகாரிகளும், போலீசாரும் உடனுக்குடன் நடவடிக்கையில் அதிரடி இறங்கும்போது, வில்லியனுாரில் மட்டும் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது ஏன்?
சட்ட விரோத பேனர்களை அகற்றாவிட்டால், அரசியல்வாதிகள் பதில் சொல்ல போவது கிடையாது. ஆனால், அதிகாரிகள் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உடனடியாக, வில்லியனுார் பைபாஸ் உள்பட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளும், போலீசாரும் கைகோர்த்து அகற்ற வேண்டும்.