மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 26 புகார்களுக்கு உடனடி தீர்வு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 26 புகார்களுக்கு உடனடி தீர்வு
ADDED : ஏப் 18, 2026 08:38 PM

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ்துறை சார்பில் மாநிலம் முழுதும் நேற்று நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், பொதுமக்கள் அளித்த 48 புகார்களில் 26 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நேற்று புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட அனைத்துப் பிராந்தியங்களிலும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது.
உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., ஸ்ருதி யாரகட்டி ஆகியோர் புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தனர். சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ராகவ், காரைக்கால் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, எஸ்.பி.,க்கள் சுபம் சுந்தர் கோஷ், பழனிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போக்குவரத்துப் பிரிவில் எஸ்.பி.,க்கள் ரச்சனா சிங், பக்தவாச்சலம் ஆகியோர் போக்குவரத்துப் புகார்களுக்குத் தீர்வு கண்டனர். வடக்கு பிரிவில் எஸ்.பி., வம்சித ரெட்டி, மேற்கு பிரிவில் எஸ்.பி., சுப்ரமணியன், ஐ.பி.எஸ்., பயிற்சி அதிகாரி கதிரவன், தெற்கு பிரிவில் எஸ்.பி., சிந்தா கோதண்டராமன் ஆகியோர் அந்தந்த பகுதிகளில் முகாமிட்டனர். மாகியில் எஸ்.பி., வினோஜ் குமார் கட்ஜ் மற்றும் ஏனாமில் எஸ்.பி., வரதராஜன் ஆகியோர் தலைமையில் முகாம் நடந்தது.
முகாம்களில் மொத்தம் 35 பெண்கள் உட்பட 207 பேர் பங்கேற்று, மனுக்களை அளித்தனர். இதில் மூத்த அதிகாரிகளிடம் நேரடியாக அளிக்கப்பட்ட 48 புகார்களில், 26 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அந்தந்த நிலையப் பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
