வருமான வரி சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி: தன்னார்வ அமைப்பினர் பங்கேற்பு
வருமான வரி சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி: தன்னார்வ அமைப்பினர் பங்கேற்பு
UPDATED : ஆக 17, 2026 06:27 PM
ADDED : ஆக 17, 2026 06:22 PM
புதுச்சேரி: லாப நோக்கமற்ற அமைப்புகள் பின்பற்ற வேண்டிய வருமான வரிச் சட்ட விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சென்னை வருமான வரி விலக்கு ஆணையரகம், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவன புதுச்சேரி கிளை சார்பில், பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகள் மற்றும் பிற லாப நோக்கற்ற அமைப்புகளுக்கான பதிவு முறைகள், வரிவிலக்கு நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.
சென்னை வருமான வரி விலக்கு கமிஷ்னர் பிரேமானந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
கூடுதல் வருமான வரி கமிஷ்னர் சுப்ரஜா பேசும்போது, 'கல்வி, மருத்துவம், சமூக நலன் சார்ந்த துறைகளில் அறக்கட்டளை, தன்னார்வ அமைப்புகள் ஆற்றி வரும் நற்பணிகளை பாராட்டுக்குரியது. இருப்பினும் அமைப்புகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, துல்லியமான கணக்கு பராமரிப்பு மற்றும் உரிய காலத்தில் சட்டப்பூர்வ கடமைகளைச் செய்வது அவசியம்' என்று குறிப்பிட்டார்.
சிறப்பு அமர்வில் சென்னை வட்டத்துணை கமிஷ்னர் உத்தரா ராஜேந்திரன் லாப நோக்கற்ற அமைப்புகளுக்கான வரிவிதிப்பு, பதிவு முறைகள், திரட்டப்படும் நிதியை அறப்பணிகளுக்கு பயன்படுத்துதல், கணக்குப்புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை பராமரித்தல், தணிக்கை தேவைகள் மற்றும் உரிய படிவங்களைத் தாக்கல் செய்தல் குறித்து பட காட்சிகளுடன் விளக்கமளித்தார்.
தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் தன்னார்வ அமைப்பினர் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
புதுச்சேரி கிளை தலைவர் மோகன்ராஜ் பெருமாள், துணைத் தலைவர் ஆறுமுகம் ராஜேஷ், செயலாளர் பத்ரிநாராயணன், பொருளாளர் நிரஞ்சனா, தென்னிந்திய பட்டய கணக்காளர் மாணவர் சங்க தலைவர் குஷால் ராஜ், உறுப்பினர் நிரஞ்சனி, மண்டலக் குழு உறுப்பினர் அபிஷேக் முரளி கலந்து கொண்டனர்.
