/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு; 5 ஆண்டுகளில் 80 குழந்தைகள் கடத்தல், 121 'போக்சோ' வழக்குகள் பதிவு

ADDED : மார் 08, 2024 06:46 AM
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் போன்ற மிக வலிமையான சட்டங்கள் இருந்தும், அவை குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாததால் குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை என்பது வருத்தமான உண்மையாக உள்ளது.
இதனை மெய்ப்பிக்கும் வகையில், புதுச்சேரி மாநிலத்தில் அண்மை காலமாகவே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐந்து ஆண்டுகளில் 80 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதுமட்டுமின்றி 121 குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. மொத்தம் 201 சம்பவங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ளது.
குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாமே
ஒரு குழந்தையின் அனுமதி இல்லாமல் தொட யாருக்கும் உரிமை இல்லை. தனது உடலுக்கு தானே உரிமையாளர் என்பதை முதலில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது அவசியம் ஆகும்.
குழந்தைகளை வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களில் 90 சதவீதம் அறிமுகமானவர்கள்தான். எனவே குழந்தை பெற்றோரிடம் பேசத் தயங்கலாம். அதனால் குழந்தைகள் பேசுவதைக் காது கொடுத்து கேட்க வேண்டும். பெரியவர்கள் சொல்வதற்கு எல்லாம் சரி எனச் சொல்ல வேண்டும் என்ற மனநிலை ஆபத்தானது. பிடிக்காதபோது, தவறாகத் தோன்றும்போது மறுப்பதற்கும் குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளை கழுத்துக்குக் கீழே தொடுவதே தேவையற்ற தொடுதல்தான். அப்படித் தொடும்போது எதிர்க்க குழந்தைகளை தயார் படுத்த வேண்டும்.
கண், காது, மூக்கு என உறுப்புகளின் பெயரைச் சொல்லிக் கொடுக்கும் போதே பிறப்பு உறுப்புகளின் பெயர்களையும், அவற்றின் பயன்பாட்டையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
தனிப்பட்ட பகுதிகளைத் தொட முயற்சிப்பவரிடம் குழந்தைகள், இது முறையற்றது தவறு என்று சொல்லி எதிர்ப்பதோடு, அதை வீட்டில் வந்து பெற்றோரிடம் சொல்லவும் குழந்தைகளை அறிவுறுத்த வேண்டும்.
பள்ளிச் சென்று வந்த பின்னும், விளையாடி விட்டு வந்த பின்னும் குழந்தைகளை கவனிப்பது அவசியமாகும். அவர்களின் அனுபவங்களைப் பொறுமையாகக் கேட்பதோடு அவர்களை குறை சொல்வதையும் தவிர்க்க வேண்டும்.
லிப்ட், படிகள் போன்ற இடங்களில் குழந்தைகளிடம் யாராவது நெருக்கமாகப் பழகுகிறார்களா, பரிசு தருவதாகக் கூறியோ, பயமுறுத்தியோ குழந்தைகளைக் கட்டுப்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.