ADDED : ஜன 02, 2025 06:40 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதுச்சேரி மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தின் கீழ் பெட்ரோல், டீசலுக்கு திருத்தப்பட்ட வரி விகிதங்கள் கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில் மாற்றி அமைத்து, அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, புதுச்சேரியில் பெட்ரோலுக்கான வாட் வரி 14.55 சதவீதத்திலிருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்கால் பகுதியில் 14.55ல் இருந்து 16.99 சதவீதமாகவும், மாகே பகுதியில் 13.32ல் இருந்து 15.79 சதவீதமாகவும், ஏனாமில் 15.26ல் இருந்து 17.69 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த திருத்தப்பட்ட வரி விகிதங்கள் நேற்று ஜன., 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. வாட் வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி புதுச்சேரியில் முன்பு லிட்டருக்கு ரூ.94.26க்கு விற்ற பெட்ரோல் தற்போது ரூ.96.26, விற்பனை செய்யப்படுகிறது. காரைக்காலில் 94.03க்கு விற்ற பெட்ரோல் 96.03க்கு விற்கப்படுகிறது. மாகேவில் 91.92க்கு விற்ற பெட்ரோல் 93.92க்கும், ஏனாமில் 94.92க்கு விற்ற பெட்ரோல் 96.92 ரூபாயாகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் புதுச்சேரியில் முன்பு 84.48க்கு விற்ற டீசல், தற்போது லிட்டருக்கு 86.48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காரைக்காலில் 84.31க்கு விற்ற டீசல் 84. 31க்கும், மாகேவில் 81.90க்கு விற்ற டீசல் 83.90க்கும், ஏனாமில் 84.75க்கு விற்ற டீசல் தற்போது 86.75 ரூபாயாகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.

