/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு புதிய கட்சி துவக்கம்
/
சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு புதிய கட்சி துவக்கம்
ADDED : அக் 28, 2025 06:14 AM

புதுச்சேரி: அண்ணா சாலை தனியார் ஓட்டலில் சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு புதிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி தற்காலிக உறுப்பினர்களை நியமித்தார்.
பின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி உரிமையை காக்கவும், பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கவும், லஞ்சம் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தவும், புதிய அரசியல் கட்சியை துவங்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் புதிய அரசியல் கட்சியை துவங்கி உள்ளோம்.
நமது மக்கள் கழகத்தின் (என்.எம்.கே.) தற்காலிகமாக பொறுப்பாளர்களாக அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு தலைவராக நேரு, துணைத்தலைவராக சீத்தாராமன், பொதுச் செயலாளராக விநாயகம், இணைப் பொதுச் செயலாளராக சுந்தரராஜு, பொருளாளராக செல்வம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நமது மக்கள் கழகம் கட்சியின் கொடியின் மேல்புறம், கீழ்புறம் சிவப்பு நிறமும், நடுவில் வெள்ளை நிறமும், மையத்தில் மஞ்சள் நிறத்தில் வட்ட வடிவம் இடம் பெற்றுள்ளது. அந்த வட்டத்தில், புதுச்சேரி கலாசாரத்தை இரு கரங்களால் தாங்கி பிடிக்ககூடிய விதமாக கிரீடத்துடன் கூடிய புதுச்சேரியின் பாரம்பரிய கட்டட ஓவியம் நீல நிறத்தில் இடம் பெற்று இருக்கிறது. அந்த கட்டட ஓவியத்தில் 30 நீலவண்ணம் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
அந்த 30 கற்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதியை குறிக்கிறது. ஓவியத்தை சுற்றி 5 நட்சத்திரங்கள் நீல நிறத்தில் இடம் பெற்றுள்ளது. அது, 5 பிரதான கொள்கைகளை குறிக்கிறது. அதன்படி, முதல் நட்சத்திரம் தனி மாநில அந்தஸ்து, 2வது கூட்டாட்சி தத்துவம், 3வது சமூகநீதி மற்றும் சமூக நல்லிணக்கம், 4வது பெண் உரிமை, 5வது லஞ்ச, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றை குறிக்கும் வகைகளில் அமைக்கப் பட்டுள்ளது.
அனைத்து மக்களுக்கும் உயர்தர மருத்துவம், தரமான கல்வி, வேலை வாய்ப்பு, நகரம் மற்றும் கிராமப்புறங்களில் சமநிலை வளர்ச்சி, சமத்துவம் மற்றும் வளமான சமூகத்தை உருவாக்க கட்சி உறுதியுடன் செயல்படும்.
இனிவரும் காலங்களில் அனைத்து தொகுதிகளில் இருந்தும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார். தொடர்ந்து, முன்னாள் எம்.பி., ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அசானா, சாமிநாதன், சீத்தாராமன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

