ADDED : செப் 29, 2026 06:33 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் குடிநீர் கட்டண உயர்வுக்கு இ. கம்யூ., மாநில நிர்வாக குழு உறுப்பினர் நாராகலைநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி அரசு குடிநீர் விநியோகத்திற்காக புதிய கொள்கையை வெளியிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த அரசாணைகளை ரத்து செய்துள்ளது. இத்திட்டம் கிராமப்புற பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கிராம குடிநீர் திட்டம் ஆகிய இரு வழிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான ஒரு யூனிட் குடிநீர் கட்டணம் ரூ.3லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தண்ணீர் சேமிப்பு தொட்டி இல்லாத வீடுகளுக்கு மாதம் ரூ.90, சேமிப்பு தொட்டி உள்ள வீடுகளுக்கு ரூ.120 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலாண்டுக்கு 90 யூனிட் வரை ரூ.8 கட்டணத்தில் குறைந்தபட்சம் ரூ.720 மற்றும் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களுக்கான குடிநீர் கட்டணங்களும் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய குடிநீர் இணைப்புக்கு ரூ.1,000 கட்டணமும், மறு இணைப்புக்கு ரூ.2,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வைப்புத் தொகையாக வீடுகளுக்கு ரூ.500 என்றும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.10,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இக்கட்டண உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிப்பதுடன், சுற்றுலாத் துறையையும் விடுதிகளின் கட்டணங்களையும் கடுமையாகப் பாதிக்கும்.
புதுச்சேரி அரசு இந்த வரி உயர்வை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், இந்திய கம்யூ., சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
