/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உற்பத்தி திறன் குறித்த தொழில்துறை கண்காட்சி
/
உற்பத்தி திறன் குறித்த தொழில்துறை கண்காட்சி
ADDED : செப் 19, 2025 03:03 AM

புதுச்சேரி: இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி கிளை சார்பில், 2ம் ஆண்டு புதுச்சேரியின் உற்பத்தி திறன்களை காட்டும் தொழிற்துறை கண்காட்சி, இண்டெக்ஸ் 2025 என்ற பெயரில் நேற்று முன்தினம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் துவங்கியது.
முதல்வர் ரங்கசாமி கண்காட்சி அரங்கினை திறந்து வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசுகையில், 'புதுச்சேரியில் எளிதாக துவங்குவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது புதுச்சேரி வணிக சூழலையே மாற்றி அமைக்க போகிறது.
இதன் மூலம் புதுச்சேரிக்கு முதலீடு அதிகரிப்பதோடு, அதிக அளவில் வேலைவாய்ப்பும் இளைஞர்களுக்கு கிடைக்கும்' என்றார்.
கண்காட்சி குறித்து புதுச்சேரி பிரிவு தலைவர் சமீர் கம்ரா கூறுகையில், 'சி.ஐ.ஐ., சார்பில், புதுச்சேரியின் உற்பத்தி திறன்களை வெளிப்படுத்தும். முதலாமாண்டு நடந்த தொழில்துறை கண்காட்சியில் 30 நிறுவனங்கள் பங்கேற்றனர்.
தற்போது 2ம் ஆண்டில் 80 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.மருந்து தயாரிப்பு, வாகன பாகங்கள், பேட்டரிகள் என தொடங்கி பல தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அரசின் ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை, இந்திய எண்ணெய் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனத்தினரும் பங்கேற்றுள்ளன.புதுச்சேரியின் உற்பத்தி திறனை அறிய பிரான்ஸ், ஜெர்மனி, தைவான், தாய்லாந்து நாட்டிலிருந்து வர்த்தக அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
சிறு மற்றும் குறு நிறுவனங்கள் உட்பட புதுச்சேரியில் உற்பத்தியாகும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ளோர் வணிக வாய்ப்புகளை விரிவாக்கிக்கொள்ளலாம்' என்றார்.
நிகழ்ச்சியில் துணை தலைவர் நடராஜன், முன்னாள் தலைவர்கள் நரசிம்மன், சண்முகானந்தம், நிர்வாக அதிகாரி பிராங்களின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று 19ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை பார்வையிடலாம்.