/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரை சோதனை செய்து தேவையற்ற ஆவணம் கேட்பு
/
காரை சோதனை செய்து தேவையற்ற ஆவணம் கேட்பு
ADDED : பிப் 05, 2025 05:46 AM
4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
புதுச்சேரி, பிப். 5-
போலீஸ் உயர் அதிகாரியின் நண்பர்கள் சென்ற காரை சோதனை செய்து தேவையற்ற ஆவணங்களை கேட்ட, 4 போலீசார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
புதுச்சேரி போலீஸ் ஐ.பி.எஸ்., உயர் அதிகாரியின் நண்பர்கள் கடந்த சில தினங்களுக்கு முன், கிருமாம்பாக்கம் அருகில் உள்ள ரிசார்ட்டிற்கு சென்று நள்ளிரவு திரும்பினர்.
அப்போது, ரோந்து சென்ற அப்பகுதி போலீசார், போலீஸ் உயர் அதிகாரியின் நண்பர்கள் பயணித்த காரை மடக்கினர்.
காரில் இருந்தவர்களிடம் போதிய ஆவணங்கள் உள்ளதா எனவும் நள்ளிரவு தாண்டி எதற்காக இங்கு வந்தீர்கள் எனவும் விசாரித்தனர். அவர்கள் கொடுத்த ஆவணங்களை பரிசோதித்து விட்டு, 'போலீஸ்' மிடுக்குடன் 'பொலியூஷன்' சர்டிபிகேட் கேட்டனர்.
அதற்கு அவர்கள், 'புதுச்சேரி மலை பிரதேசம் கிடையாது. இங்கு எதற்கு 'பொலியூஷன்' சர்டிபிகேட் கேட்கிறீர்கள். அதுவும் சட்டம் ஒழுங்கு போலீசார் எதற்கு இந்த ஆவணங்களை கேட்கிறீர்கள்' என கேட்டனர்.
இதனால் அங்கிருந்த போலீசாருக்கும், போலீஸ் உயர் அதிகாரியின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. ஒரு கட்டத்தில் காரில் வந்தது போலீஸ் உயர் அதிகாரியின் நண்பர்கள் என தெரியவந்தது. இதையடுத்து, கார் அங்கிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டது.
இந்த உரையாடல் வீடியோ உயர் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
காரை சோதனை செய்து தேவையற்ற ஆவணங்களை கேட்ட, 4 போலீசார் மீதும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், அதில் குறிப்பாக ஒருவரை மட்டும், 'டிஸ்மிஸ்'செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், கிருமாம்பாக்கம் ரோந்து போலீசார் ஞானமூர்த்தி, திவித்ரசன், நவீன்காந்த், ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகிய, 4 பேரும் நேற்று அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான ஆணையை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம்கோஷ் வெளியிட்டுள்ளார்.