ஓட்டு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
ADDED : ஏப் 17, 2026 11:42 PM

புதுச்சேரி: புதுச்சேரி ஓட்டு எண்ணம் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. ஓட்டுப்பதிவிற்கு பயன்படுத்தி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, மகளிர் பொறியியல் கல்லுாரி ஆகிய மூன்று மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் துணை ராணுவம் மற்றும் போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வருவாய் துறையினர் மற்றும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரிகள் தினசரி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள இந்த மூன்று மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வரும் 4ம் தேதி நடைபெறவுள்ள ஓட்டு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஓட்டு எண்ணும் பணிக்கு, அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு தனித்தனியே வழி ஏற்படுத்தவும், பேரிகார்டு அமைக்கவும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மூன்று மையங்களில் ஷாமியனா பந்தல், குடிநீர் வசதி ஏற்படுத்திட ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின்பேரில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், கூடுதல் கலெக்டர் சுதாகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதேபோன்ற, காரைக்காலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா அரசு கல்லுாரி மையத்தை கலெக்டர் இஷிதாரதி ஆய்வு செய்து, ஓட்டு எண்ணும் பணிக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
