/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ரூ.5,500 கோடிக்கு... இடைக்கால பட்ஜெட்:அமைச்சரவையில் ஆலோசனை
/
புதுச்சேரியில் ரூ.5,500 கோடிக்கு... இடைக்கால பட்ஜெட்:அமைச்சரவையில் ஆலோசனை
புதுச்சேரியில் ரூ.5,500 கோடிக்கு... இடைக்கால பட்ஜெட்:அமைச்சரவையில் ஆலோசனை
புதுச்சேரியில் ரூ.5,500 கோடிக்கு... இடைக்கால பட்ஜெட்:அமைச்சரவையில் ஆலோசனை
ADDED : பிப் 06, 2026 05:18 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 12ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கலாவதை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி தலைமையில்நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. புதுச்சேரி சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால், புதுச்சேரியில் இந்தாண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. அதற்கு பதிலாக அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கான பட்ஜெட் தாக்கலுக்காக வரும் 12ம் தேதி புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.
அன்றைய தினம் முதல்வரும், நிதி அமைச்சருமான ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
மேலும் 2025--26ம் நிதி ஆண்டில் கூடுதல் செலவினங்களுக்கு சட்டசபையில் ஒப்புதல் கோரப்படுகிறது. இதுதொடர்பாக விவாதிக்க முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சட்டசபையில் உள்ள கேபினட் அறையில் பிற்பகல் 12:15 மணிக்கு கூடியது. சுமார் 3 மணி நேரம் இக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார், தலைமை செயலர் சரத்சவ்கான், அரசு செயலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட், கூடுதல் செலவின தொகை நிர்ணயிக்கப்பட்டது.
ஐந்து மாத பட்ஜெட் மத்திய அரசின் பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது புதுச்சேரி மாநிலத்தின் 12 மாத பட்ஜெட் 14,100 கோடியாக உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் புதிய ஆட்சிக்கு போதிய கால அவகாசம் அவசியம் தேவைப்படுகிறது. எனவே ஐந்து மாதத்திற்கு 5,500க்கு கோடிக்கு ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் முடிவு செய்து, அமைச்சரவை இறுதி ஒப்புதல் வழங்கியது. எனவே ஓரிரு தினங்களில் அனைத்து வரவு செலவு கணக்கீடுகள் முடிந்து 5,875 கோடி ரூபாய் அளவிற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலுக்கு பிள்ளையார் சுழி பிரதமர் மோடி புதுச்சேரி வருகை இருமுறை தள்ளிபோய் விட்டது. பிரதமர் புதுச்சேரியின் வருகையின்போது 5 ஆயிரம் கோடிக்கு மேல் புதிய நலத்திட்டங்கள் துவக்கி வைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் புதிய திட்டங்கள் அறிவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தொழில் துறையை பொருத்தவரை சேதராப்பட்டு, கரசூரில் தொழிற்பேட்டை உருவாக்க புதுச்சேரி அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பிரதமர் வருகையின்போது கரசூர் தொழிற்பேட்டையில் ஆர்ச் அமைத்து தொடக்க விழாவை நடத்துவது, தொழிற்சாலைகளுக்கு பிரதமர் வாயிலாக விண்ணப்பம் கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
5 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு துறைகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தினாலும் என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சியில் புதிய தொழிற்சாலை கொண்டு வரவில்லை என, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. எனவே கரசூர் தொழிற்பேட்டை தொழிற்சாலை திட்டத்தை பிரதமர் மோடி வாயிலாக துவக்கி வைத்து, எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு பணிகளை வேகப்படுத்தி வருகிறது.

