செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பான தரவு பகுப்பாய்வு சர்வதேச மாநாடு
செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பான தரவு பகுப்பாய்வு சர்வதேச மாநாடு
ADDED : நவ 12, 2026 09:53 PM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில், செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பான தரவு பகுப்பாய்வு குறித்த இரண்டாவது சர்வதேச மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (நவ.,12) துவங்கியது.
மாநாட்டிற்கு, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மோகன் தலைமை தாங்கினார். இந்திய தொழில் நுட்பக்கழகம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிருஷ்ணமோகன், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் மாற்றங்கள், நோய் கண்டறிதல், நோயாளிகளுக்கான மருத்துவப் பராமரிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.
சென்னையைச் சேர்ந்த எச்.சி.எல். டெக் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுச் சேவைகள் பிரிவு இயக்குநர் கோடீஸ்வரன் சீனிவாசன், எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்களைப் பெறுவதுடன், வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் தொடர்ந்து அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பெங்களூருவில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தின் விஞ்ஞானி பாலாஜி ராஜேந்திரன், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டில், டிஜிட்டல் நம்பகத் தன்மை, பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
2 நாள் நடக்கும் சர்வதேச மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், தொழில் துறை வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தரவு பகுப்பாய்வு ஆகிய துறைகளில் அண்மைக்கால முன்னேற்றங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பப் போக்குகள் மற்றும் ஆராய்ச்சிச் சவால்கள் குறித்து விவாதித்தனர்.
மாநாட்டில் மொத்தம் 278 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, அவை தகுதி வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் மதிப்பீட்டுச் செயல்முறைக்குப் பின் 102 கட்டுரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கத் தேர்வு செய்யப்பட்டன.
ஏற்பாடுகளை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் இளவரசன், பேராசிரியர்கள் மனோகரன், சாருலதா, சாலினி, தேன்மொழி, ஷீபா, லட்சுமண பாண்டியன், சத்தியமூர்த்தி மற்றும் சரளா ஆகியோர் செய்திருந்தனர்.
