/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதாம்பாள் நகரில் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம்
/
சாரதாம்பாள் நகரில் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம்
ADDED : ஜன 09, 2025 06:14 AM

புதுச்சேரி: புதுச்சேரி சாரதாம்பாள் நகரில் ரூ. 5.5. கோடி செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம் வரும் பிப்., மாதம் திறக்கப்பட உள்ளது.
கடல், குளம், ஆறுகளில் சிக்கி தவிக்கும் நபர்களை மீட்கவும், தன்னை தானே காப்பாற்றி கொள்ள ஒவ்வொரு நபருக்கும் நீச்சல் பயிற்சி அவசியம். புதுச்சேரியில் அரசு சார்பில் நீச்சல் குளம் கிடையாது. தனியார் மூலம் மட்டுமே நீச்சல் பயிற்சி பெறும் நிலை உள்ளது.
மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நீச்சல் குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
நீச்சல் குளம் அமைக்க நிலம் இல்லாததால், கடற்கரை சாலை ஜப்பான் நீரூற்று பின்புறம் உள்ள அரசு இடத்தை ஆசீரம நிர்வாகத்திற்கு ஒப்படைத்து, அதற்கு பதிலாக எல்லப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் நகரில் உள்ள ஆசிரம இடத்தில் ரூ.5 கோடி மதிப்பில் நீச்சல் குளம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது.
சர்வதேச தரத்தில் 50 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம், 1.75 மீட்டர் ஆழத்துடன், 16 உடை மாற்றும் அறைகள் வசதியுடன் நீச்சல் குளம் கட்டுமானம் நடந்தது.
நிர்வாக குழப்பங்கள் காரணமாக கட்டுமான நிறுவனம் விலகியது. கூடுதலாக ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்து புதுச்சேரியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் மூலம் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பணிகள் முடிந்து அடுத்த மாதத்தில் திறக்கப்பட உள்ளது.
விளையாட்டு வீரர்கள் கூறுகையில்; புதுச்சேரி அரசில் நீச்சல் பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள் இல்லை. புதிய நீச்சல் குளம் கட்டி முடித்ததும், லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் போல் தனியார் நீச்சல் பயிற்சி சங்கத்திடம் நீச்சல் குளம் பராமரிப்பு பணி ஒப்படைக்கப்படும். தனியார் சங்கம் நீச்சல் பயிற்சிக்கு கட்டணம் நிர்ணயித்து லாபம் பார்ப்பர். இதனால் பொதுமக்கள், அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு எந்த பயனும் ஏற்படாது.
எனவே, நீச்சல் குளத்தை அரசு பராமரித்து, அனைத்து தரப்பினரும் நீச்சல் பயிற்சி பெற நீச்சல் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

