ADDED : நவ 13, 2024 06:52 AM

புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் மாநில அளவிலான கலா உத்சவ் போட்டிகள் நேற்று துவங்கியது.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை, சமக்ர சிக் ஷா சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலா உத்சவ் போட்டிகள் கடந்த அக்டோடர் மாதம் நடந்தது. அதில், வாய்ப்பாட்டு, இசைக்கருவி மீட்டல், நடனம், நாடகம், பாரம்பரிய கதை சொல்லுதல் ஆகிய பிரிவுகளில், மாநில அளவிலான போட்டிக்கு புதுச்சேரியில் 35, காரைக்கால் 8, மாகே 9, ஏனாம் 18 என 80 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, மாநில அளவிலான கலா உத்சவ் போட்டிகள் காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று துவங்கியது. கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி போட்டிகளை துவக்கி வைத்தார். சமக்ர சிக் ஷா திட்ட இயக்குனர் தினகர் முன்னிலை வகித்தார்.
அதன்படி, காலை 9:30 மணிக்கு வாய்ப்பாட்டு, நடனம், 10:30 மணிக்கு இசை கருவி மீட்டல், 11:00 மணிக்கு நாடகம், 11:30 மணிக்கு பாரம்பரிய கதை சொல்லுதல் ஆகிய போட்டிகள் நடந்தது. தொடர்ந்து, இன்று (13ம் தேதி) மற்றும் நாளை (14ம் தேதி) விஷூவல் ஆர்ட்ஸ் போட்டிகள் ஜவகர் பால்பவனில் நடக்கிறது.
ஏற்பாடுகளை ஜவகர் பால்பவன் தலைமை ஆசிரியர் மணிவேல் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

