/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குஷியில் காமராஜ் நகர் வாக்காளர்கள்
/
குஷியில் காமராஜ் நகர் வாக்காளர்கள்
ADDED : ஆக 02, 2025 11:15 PM
தமிழகத்தின் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் அரசியலில் கால்தடம் பதித்துவிட்டார். பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிப்படையாக மார்ட்டின் வாரிசை காமராஜ் நகர் தொகுதிக்கு அழைத்து வந்து தடபுடலாக விழா நடத்தி, விசுவாசத்தை காட்டி அசத்திவிட்டனர்.
வரும் சட்டசபை தேர்தலில் அவர் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், வீடு வீடாக மக்களிடம் பல்ஸ் பார்க்கப்பட்டு வருகிறது.
காமராஜ் நகர் தொகுதிக்கு என்ன தேவை, மக்களுக்கு என்ன தேவை என வீடு வீடாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. உங்க வீட்டிற்குஇன்வெர்ட்டர் கொடுத்தால் சரியாக இருக்குமா, அக்வா வாட்டர் பியூரிபையர் வேண்டுமா என தொகுதி முழுவதும் சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
காமராஜ் தொகுதியில் வசதி படைத்தவர்கள், வியாபாரிகள் அதிக அளவில் வசிக்கின்றனர். மற்ற தொகுதி போன்று வேலைவாய்ப்பினை கேட்டு எப்போதும் நச்சரிக்கமாட்டார்கள். சாலை, கழிவு நீர், குடிநீர் வசதி செய்து கொடுத்தாலே போதும்.
சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்றேசர்வேயிலும் தெரிய வர, சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே இன்வெர்ட்டர், அக்வா வாட்டர் பியூரிபையரை கொடுத்துவிடலாம் என, மார்ட்டின் தரப்பினரும் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.
காமராஜ் நகர் தொகுதியின் தற்போதை எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான ஜான்குமார் தனது தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் பற்றிய டேட்டாவை அப்டேட்டாக வைத்திருப்பார். இதற்காகவே தனி அலுவலகத்தை திறந்து வைத்து, தினமும் அன்னதானத்தை வழங்கி வருகின்றார்.
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடிக்கடி தொகுதி மக்களுக்கு வீடு தேடி சென்று பரிசுகளையும் வாரி வழங்கி குஷிப்படுத்தி வருகிறார்.
ஜான்குமார் தனது நான்கு ஆண்டு தொடர் கவனிப்பால் தொகுதியை கட்டிபோட்டு இருக்க. இப்போது காமராஜ் நகர் தொகுதிக்கு பல கோடிக்கு அதிபரான லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிட உள்ளதால், அத்தொகுதி வி.ஐ.பி., தொகுதியாக மட்டுமின்றி, கவனிப்பு தொகுதியாகவும் மாறிவிட்டது.காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராஜலட்சுமி தட்டுகிற வேளையிது என தொகுதி முழுக்க ஒரே பேச்சாகவும்உள்ளது.
மகாலட்சுமியே விரும்பி நம் வீட்டிற்குள் நுழைந்தால் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா. எப்போது வேண்டுமென்றாலும் வரட்டும்; எவ்வளவு வேண்டுமென்றாலும் தரட்டும் என காமராஜ் நகர் தொகுதி மக்களும் குஷியில் வழி மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.