/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு பூட்டு
/
காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு பூட்டு
ADDED : ஜூலை 12, 2025 04:06 AM

காரைக்கால்: காரைக்கால் அம்மையாருக்கு சீர்வரிசை எடுத்து செல்லும் நிகழ்ச்சியில் இருகட்சி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட போட்டியில், கோவிலுக்கு பூட்டு போட்டதை கண்டித்து காங்., - தி.மு.க., வினர் சீர்வரிசையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை சுவாமி வீதியுலா, மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வலத்தெரு மாரியம்மன் கோவிலிருந்து ஒரு ஜாதி சங்கத்தினர் சீர்வரிசை எடுத்து சென்று, அம்மையாரை புஷ்ப பல்லக்கில் ஏற்றி வீதியுலா நடத்துவது வழக்கம்.
அதன்படி, காங்., - தி.மு.க., ஆதரவு பெற்ற ஒரு ஜாதி சங்கத்தினர் சீர்வரிசை எடுக்க மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, என்.ஆர்.காங்., அமைச்சர் ஆதரவு பெற்ற ஜாதி சங்கத்தினர் கோவிலை பூட்டி சாவியை எடுத்து சென்றனர்.
இதைக்கண்டித்து, இளைஞர் காங்., மாவட்ட தலைவர் ரஞ்சித், தி.மு.க., விவசாய அணி அமைப்பாளர் பிரபு தலைமையில் சீர்வரிசையுடன் கோவில் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் தாசில்தார் செல்லமுத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அமைச்சர் ஆதரவாளர்கள் கோவிலை திறக்க முன்வரவில்லை. இதையடுத்து, இரு பிரிவினருக்கு இடையே உள்ள பிரச்னை காரணமாக திருவிழா தடைப்படக்கூடாது. சீர்வரிசையை கோவில் வாசலில் இருந்தே எடுத்து செல்லும் படி தாசில்தார் அறிவுறுத்தினார்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு காங்., தி.மு.க., ஆதரவு சங்கத்தினர் கோவில் வாசலில் இருந்து சீர்வரிசையை எடுத்து சென்றனர். இதனால், அம்மையாருக்கு சீர்வரிசை எடுத்து செல்லும் நிகழ்ச்சி தாமதமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.