/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணிற்கு சிறுநீரக மாற்று சிகிச்சை
/
பெண்ணிற்கு சிறுநீரக மாற்று சிகிச்சை
ADDED : பிப் 07, 2024 07:41 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, பல ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. பின், பல காரணங்களால், 10 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை நடக்கவில்லை.
இந்நிலையில், மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் பகுதியை சேர்ந்த, 37 வயது பெண் ஒருவருக்கு, 58 வயதான அவரது தாயார், சிறுநீரகத்தை தானமாக வழங்க முன் வந்தார். இதையடுத்து, அப்பெண்ணிற்கு, நேற்று மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேல் முன்னிலையில், சிறுநீரியல் துறை தலைவர் சுதாகர் தலைமையில், மயக்க மருந்து துறை தலைவர் மதன், சிறுநீரகவியல் துறை தலைவர் குமார் ஆகியோரால் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை, வடபழனி சிம்ஸ் மூத்த சிறுநீரக அறுவை சிகிச்சை ஆலோசகர் முத்து வீரமணி, சவீதா பல்கலை பேராசிரியர் சிவசங்கர் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். மேலும், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ள உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பாராட்டு
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினரை முதல்வர் ரங்கசாமி அழைத்து, பாராட்டினார்.
பின், அவர், கூறுகையில், 'மருத்துவக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி, மருத்துவமனையில் நலமுடன் இருக்கிறார்.தொடர்ந்து, சிறுநீரகம், மூட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், சிறப்பு மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க, அரசு முடிவு செய்துள்ளது' என்றார்.

