UPDATED : நவ 26, 2026 07:16 PM
ADDED : நவ 26, 2026 07:16 PM
புதுச்சேரி: ஜிப்மரில் பட்டுப்போன மரம் முறிந்து விழுந்து தொழிலாளி காயம் அடைந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் பரமசிவம்,31. இவர் தனது ஊரை சேர்ந்த ராஜ்குமார், சிவக்குமார், நலம்கோபால் ஆகியோருடன் ஜிப்மரில் நடக்கும் கட்டுமான பணிக்கு ஒப்பந்த தொழிலாளியாக அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார்.
இவர் தங்கி இருந்த இடத்தின் அருகே இரண்டு பட்டுப்போன காய்ந்த மரங்கள் இருந்துள்ளன. கடந்த 5ம் தேதி இவர்கள் தங்கியுள்ள இடத்திற்கு பரமசிவம் வந்து கொண்டிருந்தார். அங்கிருந்த காய்ந்த மரம் முறிந்து அவர் மீது விழுந்தது. இதில், அவரின் இடது கை பாதிக்கப்பட்டது. உடனே அவர், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் டி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், ஒப்பந்ததாரர்கள் கண்ணன், செல்லபெருமாள், சூப்பர் வைசர் மணிகண்டன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
