ADDED : மார் 21, 2024 12:28 AM
புதுச்சேரி : கடலோர பாதுகாப்பு போலீசார் தேர்தல் ரோந்து பணிக்காக வாடகைக்கு எடுத்து சென்ற படகு இருமுறை கடலில் நின்றதால், படகில் பயணித்தவர்கள் பயத்துடன் கரை திரும்பினர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு மதுபானம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக ஆங்காங்கே வாகன சோதனைகள் நடந்து வருகிறது. கடல் வழியாக ஏதேனும் கடத்தல் நடக்கிறதா என்பதை கண்காணிக்க புதுச்சேரி கடலோர பாதுகாப்பு பிரிவுக்கு தேர்தல் துறை உத்தரவிட்டது.
புதுச்சேரி கடலோர பாதுகாப்பு போலீசுக்கு ஏற்கனவே இருந்த 12 டன் அதிநவீன ரோந்து படகு ஓராண்டிற்கு முன், பழுதாகி நின்று விட்டது. இதனால் நேற்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் செல்லும் மீன்பிடி விசைப்படகு ஒன்றை வாடகைக்கு எடுத்த கடலோர காவல் பிரிவு போலீசார், அதில் சில பத்திரிக்கையாளர்களையும் அழைத்து கொண்டு ரோந்திற்கு கடலுக்கு புறப்பட்டனர்.
புறப்பட்ட சில நிமிடத்திலே வலை கயிறு ஒன்றில் படகு சிக்கியது.இதனால் படகில் இருந்தவர்கள் சற்று அச்சமடைந்தனர். படகில் வந்த மீனவர்கள் கடலில் குதித்து படகில் சிக்கி இருந்த வலை கயிற்றை கழற்றி படகை மீட்டனர். பின்பு அங்கிருந்து சென்ற போலீசார் ஸ்கூபா டைவிங் செல்லும் படகுகளில் பயணித்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
படகு திரும்பும்போது மீண்டும் 2 முறை வலையில் சிக்கி நின்றது. பின், ஒரு வழியாக படகை சரி செய்து, கரைக்கு திரும்பினர்.

