'லாரிங்காலஜி பெஸ்ட் - 2026' அறிவியல் கருத்தரங்கம்
'லாரிங்காலஜி பெஸ்ட் - 2026' அறிவியல் கருத்தரங்கம்
ADDED : ஜூலை 05, 2026 03:15 AM

புதுச்சேரி: பு துச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனம், இந்திய காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் சங்கம் புதுச்சேரி கிளை சார்பில், ' புதுச்சேரி லாரிங்காலஜி பெஸ்ட் - 2026' என்ற அறிவியல் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
ஆனந்தா இன் கன்வென்ஷன் நடந்த கருத்தரங்கை சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் துவக்கி வைத்தார். இதில், குரல்வளையில் ஏற்படும் நோய்கள், அவற்றிற்கான நவீன அறுவைச் சிகிச்சை முறைகள் மற்றும் நேரலை அறுவைச் சிகிச்சை காணொலி விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
மருத்துவக் கண்காணிப்பாளர் ரமேஷ் சிறப்புரையாற்றினார்.
குரல்வளையில் ஏற்படும் கட்டி மற்றும் சதை வளர்ச்சி உள்ளிட்ட நோய்களுக்கு லேசர், மைக்ரோடெபிரைடர் மற்றும் கோப்லேஷன் போன்ற அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி நேரலை அறுவைச் சிகிச்சைகள் குறித்து சிறப்பு நிபுணர்கள் ஜெயக்குமார் மேனன், ஆண்டனி இருதயராஜன், மஞ்சு ஐசக், சஞ்சய் சுப்பையா மற்றும் ராகவி விஷ்ணு பிரசன்னா ஆகியோர் டாக்டர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
குரல்வளை அசைவு, விழுங்குதல் திறன், மூச்சுக்குழாய் பரிசோதனைகள், குரல்வளை ஊசி சிகிச்சை, குரல்வளை வடிவமைப்பு அறுவை சிகிச்சை ஆகியவை குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், தேசிய காது கேளாமைத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டம் மற்றும் அறுபடை வீடு மருத்துவக் கல்லுாரியின் ஆடியாலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பேத்தாலஜிதுறைகள் இணைந்து, பேச்சுத் திறன் தாமதம் மற்றும் காது கேளாமையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டன.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டைத் துறைத் தலைவர் ஸ்டாலின் சிவகுருநாதன் நன்றி கூறினார்.
