ADDED : ஆக 13, 2026 05:53 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான சட்டக் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அரியாங்குப்பம் கண்காணிப்பு மற்றும் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், நன்னடத்தை அதிகாரி ஜெகதீஷ் வரவேற்றார். உதவி இயக்குனர் பாலாஜி தலைமை தாங்கினார். சிறார் நீதிக்குழும உறுப்பினர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ரமேஷ் முகாமை துவக்கி வைத்து, இலவச சட்ட உதவி ஆணையத்தின் பணிகள் மற்றும் சிறார்களுக்கான உரிமைகள், கல்வியின் முக்கியத்துவம், பதின் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள், போதை பழக்கங்களால் தனி மனித வாழ்விலும், சமூகத்திலும் ஏற்பட்டு வரும் தீமைகள் குறித்து பேசினார்.
முன்னாள் சிறுவர் நலக்குழு உறுப்பினர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி, கல்வி இடைநிற்றலால் ஏற்படும் பாதிப்புகள், சமூக ஊடகங்களை பொறுப்போடு பயன்படுத்தும் முறைகள், உயர் எண்ணங்கள், எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுதல், தனித்திறுன்களை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் மன நலன் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளித்தார்.
சுவாமி விவேகானந்தா ஊரக சமூகக் கல்லுாரி பயிற்சியாளர்கள் வெங்கடேஸ்வரன் மற்றும் நந்தகுமார் தொழில் வேலை வாய்ப்புகள் குறித்துப் பேசினர். முகாமில் கண்காணிப்பு மற்றும் சிறப்புப் பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.
